ஓடையில் மூட்டை மூட்டையாக கழிவு: சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

தினமலர்  தினமலர்
ஓடையில் மூட்டை மூட்டையாக கழிவு: சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

உடுமலை:உடுமலை அருகே, மழைநீர் ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், நீர்நிலை பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.உடுமலை அருகே, கோட்டமங்கலம் கிராமத்தில் ஜக்கம்மாள் ஓடை செல்கிறது. உப்பாற்றின் இணை ஓடையாகவும் உள்ளது. மழைக்காலங்களில் ஜக்கம்மாள் ஓடையில் செல்லும் நீர் உப்பாற்றுடன் கலந்து, உப்பாறு அணைக்கு செல்கிறது.
ஓடையில் தேங்கி நிற்கும் தண்ணீர் கால்நடைகளின் தாகம் தீர்த்து வருகிறது.இந்நிலையில், ஜக்கம்மாள் ஓடையில் மூட்டை, மூட்டையாக கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. எந்தவித கழிவுகள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் மக்களை பாதித்து வருகிறது. இதனால், நீர்நிலை மாசுபடுவதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.விவசாயிகள் கூறியதாவது: ஜக்கம்மாள் ஓடை இப்பகுதியின் முக்கிய மழைநீர் ஓடையாக உள்ளது. மழைக்காலங்களில் செல்லும் தண்ணீர் சுற்றுப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்துக்கு உதவுகிறது. இந்நிலையில், மழைநீர் ஓடையில் அத்துமீறி சிலர் மூட்டை, மூட்டைகளாக கழிவுகளை கொட்டியுள்ளனர்.
காலாவதியான மருந்துகளாக உள்ளது போல் காணப்படுகிறது. மழைக்காலங்களில், கழிவுகள் மழைநீரில் கலந்து பாசனத்துக்கு செல்லும் போது பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும், தண்ணீரில் மருந்துகள் கலப்பதால் தண்ணீர் விஷமாகி கால்நடைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.யாருக்கும் தெரியாத வகையில் இரவு நேரங்களில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதுபோல், நீர்நிலைகளில் அத்துமீறி கழிவுகள் கொட்டுபவர்களை உள்ளாட்சி நிர்வாகத்தின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

மூலக்கதை