பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில்... பசுஞ்சோலை! களமிறங்கும் தன்னார்வலர்களால் உற்சாகம்

தினமலர்  தினமலர்
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில்... பசுஞ்சோலை! களமிறங்கும் தன்னார்வலர்களால் உற்சாகம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே அதிகாரிகள், ஸ்டேஷன் வளாகத்தில் நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறனர். இத்திட்டத்துக்கு, பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டுவதால், 'ரயில்வே சோலை' உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.பொள்ளாசாச்சி ரயில்வே ஸ்டேஷன் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டு, நுாற்றாண்டு விழா கண்ட பெருமை கொண்டது. பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள், அகல ரயில் பாதையாக மேம்படுத்தும் பணி துவங்கியதும், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஆறு ஆண்டுகளில், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சுற்றுப்பகுதி பராமரிப்பின்றி பொலிவிழந்தது.அகல ரயில் பாதை பணியின் ஒரு பகுதியாக, ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிக்கப்பட்டாலும், ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகள் புதர் மண்டி காட்சியளித்தன.படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதிகாரிகள், ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஸ்டேஷன் மேலாளர், மாஸ்டர்கள், வர்த்தக பிரிவு ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், பொறியாளர்கள் என, 50க்கும் மேற்பட்டடவர்கள் பணியாற்றுகின்றனர்.ரயில்வே பாதுகாப்பு படைவீரர்கள், தங்கள் ஓய்வறைகளை சுற்றிலும் வீட்டு தோட்டம் அமைத்து, வாழை, தக்காளி உள்ளிட்டவை பயிரிட்டனர்.ஸ்டேஷன் வளாகத்தில் புதர் அடர்ந்து கிடக்கும் இடத்தை சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நடவு செய்தனர். வேம்பு, ஆல், பூவரசு, கொன்றை என, 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். பருவமழைக்கு, பெரும்பாலான மரக்கன்றுகள் வேர் பிடித்துள்ளன.இதை அறிந்த, ஸ்டேஷன் மேலாளர் பிஸ்வாஸ் உள்ளிட்ட மற்ற அதிகாரிகள், பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் ஓய்வு நேரத்தில் மரக்கன்று வளர்க்கும் பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், சமத்துார் வாகீஸ்வரி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ரயில்வே ஸ்டேஷனில், சமூக காடு உருவாக்கப்படும் இடத்தில் துாய்மை பணியில் நேற்று ஈடுபட்டனர்.பல்வேறு தரப்பினரும் மரம் வளர்ப்பு, பராமரிப்பு பணிகளில் ஆர்வம் காட்டுவதால், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே ஸ்டேஷனை சுற்றிலும் நிறைய இடம் புதர் மண்டி, பராமரிப்பின்றி உள்ளது. இடத்தை சுத்தம் செய்து, மரங்கன்றுகள் வளர்த்து, 'ரயில்வே சோலை' உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 'தன்னாவர்லர்கள் தோள் கொடுப்பதால், கனவு நனவாகும் என்ற நம்பிக்கை எற்பட்டுள்ளது,' என்றனர்.

மூலக்கதை