டிசம்பர் 7ல் நடக்கும் தெலங்கானா தேர்தலில் காங். முதல் பட்டியல் :65 வேட்பாளர்கள் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
டிசம்பர் 7ல் நடக்கும் தெலங்கானா தேர்தலில் காங். முதல் பட்டியல் :65 வேட்பாளர்கள் அறிவிப்பு

ஐதராபாத்: அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 65 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தெலங்கானா சட்டப்பேரவையில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் கட்சி தலைவர் ராகுல் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் உள்ளிட்ட  65 வேட்பாளர்களை கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.இதன்படி, தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஹுசுர் நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி பத்மாவதி, கொடாட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். தற்போது கலைக்கப்பட்ட சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக செயல்பட்ட கே.ஜனா ரெட்டி நாகர்ஜூனசாகர் தொகுதியிலும், கொடங்கல் தொகுதியில் மாநில காங்கிரஸ் பணிக்குழு தலைவர் ரேவந்த் ரெட்டி மீண்டும் போட்டியிடுகிறார். மதிரா தொகுதியில் மாநில காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பட்டிவிக்ரமார்கா நிற்கிறார். இந்த பட்டியலில் முன்னாள் எம்பிக்கள் சர்வே சத்யநாராயணா (செகந்திராபாத் கண்டோன்ெமன்ட்) பொன்னம் பிரபாகர் (கரீம்நகர்), பல்ராம் நாயக் (மகபூபத்) தொகுதிகளிலும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றனர். இது தவிர பிரிக்கப்படாத ஆந்திரா மாநிலத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில தலைவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் காங்கிரசில் இணைந்த விஜயரமணாராவ், அனுசுயா, வென்டேரு பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு முதல் பட்டியலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் குமார் யாதவ் முசீராபாத் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

மூலக்கதை