ரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் சாதனை புளியங்கொட்டையில் இருந்து சிக்குன் குனியாவுக்கு மருந்து

தினகரன்  தினகரன்
ரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் சாதனை புளியங்கொட்டையில் இருந்து சிக்குன் குனியாவுக்கு மருந்து

புதுடெல்லி: சிக்கன்குனியாவை குணப்படுத்தும் வைரஸ் எதிர்ப்பு புரதத்தை ரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐஐடி) பேராசிரியர்கள் சாய்லி டோமர் மற்றும் பிரவீந்திர குமார் ஆகியோர் புளியங்கொட்டையில் வைரஸ் எதிர்ப்பு பொருள் அடங்கிய புரதத்தை கண்டுபிடித்துள்ளனர்.  இதைக்கொண்டு சிக்குன் குனியா காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கும் மூலப்பொருளை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இதற்கான பேடன்ட் உரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர். தனது கண்டுபிடிப்பு குறித்து ஆராய்ச்சியாளர்களின் ஒருவரான சாய்லி டோமர் கூறியதாவது: புளி இந்தியாவின் மிக முக்கியமான ஆயுர்வேத மருந்தாக பல ஆண்டாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. புளியம் பழம், விதைகள், இலைகள், புளியமரப்பட்டைகள் ஆகியவை வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றை போக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர புளியம்பட்டையை அரைத்து உடல் காயங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகிறது. இந்த நிலையில் புளியங்கொட்டையில் உள்ள லேக்டின் என்ற வைரஸ் எதிர்ப்பு பொருளை சிக்குன் குனியாவை போக்கும் மருந்தாக பயன்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை கொண்டு எச்ஐவி போன்றவற்றை குணப்படுத்தும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டுள்ளோம். இந்த லேக்டினை கொண்டு சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது நோய்தொற்று 64 சதவீதம் அளவுக்கு குறைந்தது. இதேபோல் ஆர்என்ஏ வைரசும் 45 சதவீதம் அளவுக்கு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். மற்றொரு ஆராய்ச்சியாளரான பிரவீந்திர குமார் கூறுகையில், `சிக்குன் குனியா உள்ளிட்ட சில நோய்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்து மற்றும் தடுப்பூசிகள் இதுவரை சந்தைக்கு வராத நிலையில் லேக்டின் கண்டுபிடிப்பு சிக்குன் குனியாவுக்கு மருந்து கண்டுபிடிக்க மிகவும் உதவியாக இருக்கும்’’ என்றார்.

மூலக்கதை