ரபேல் போர் விமான ஒப்பந்தம் டசால்ட் சிஇஓ விளக்கம் காங்கிரஸ் நிராகரிப்பு

தினகரன்  தினகரன்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் டசால்ட் சிஇஓ விளக்கம் காங்கிரஸ் நிராகரிப்பு

புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அளித்த விளக்கத்தை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு கடந்த 2016ல் ஒப்பந்தம் செய்தது. இதில் இந்தியாவில் உதிரிபாகங்களை இணைக்கும் நிறுவனமாக அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குதாரர் ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதை மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்து வருகிறது. டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ரபேல் போர் விமானங்களை, டசால்ட்  நிறுவனத்துடன் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் பங்கு தாரராக கொண்டு தயாரித்து வழங்க இருக்கிறது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்க வில்லை. விமான ஒப்பந்தம் தொடர்பாக நான் கூறிய தகவல்கள், வெளியிட்ட அறிக்கைகளும் உண்மையானவை.  டசால்ட் நிறுவனத்தின் பங்குதாரராக அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது எங்கள் நிறுவனத்தின் முடிவு தான்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில் டசால்ட் நிறுவன சிஇஓவின் விளக்கத்தை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டிவிட்டர் பதிவில், ‘‘டசால்ட் சிஇஓ கூறிய பொய்யை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணைதான் தேவையே தவிர திருத்தப்பட்ட விளக்கங்களை ஏற்க முடியாது. பாஜ அரசும் டசால்ட் நிறுவனமும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சில தகவல்களை மறைக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை