நடத்தை சரியில்லை புகார் பிளிப்கார்ட் சிஇஓ ராஜினாமா

தினகரன்  தினகரன்
நடத்தை சரியில்லை புகார் பிளிப்கார்ட் சிஇஓ ராஜினாமா

புதுடெல்லி: நடத்தை சரியில்லை புகாரை தொடர்ந்து, பிளிப்கார்ட் சிஇஓ பின்னி பன்சால் ராஜினாமா செய்தார். ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) பின்னி பன்சால். சமீபத்தில் இந்த நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியது. இந்நிலையில், நடத்தை சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, பின்னி பன்சால் ராஜினாமா செய்துள்ளதாக, வால்மார்ட் நிறுவனம் பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது. பின்னி பன்சால் நடத்தை சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பிளிப்கார்ட் - வால்மார்ட் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பன்சால் மறுத்துள்ளார். விசாரணையில் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் பின்னி பன்சால் ராஜினாமா செய்து விட்டதாகவும், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் பிளிப்கார்ட் - வால்மார்ட் தெரிவித்துள்ளது. பின்னி பன்சால் நடத்ைத சரியில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டா அல்லது வேற புகாரா என்று நிறுவன தரப்பில் விளக்கம் எதுவும் தரப்படவில்லை. இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் நுழைய துடித்து வந்த வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை வாங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தற்போது அமேசான் - பிளிப்கார்ட் இடையேதான் ஆன்லைன் வர்த்தக போட்டி இருந்து வருகிறது. இந்த நிலையில், பிளிப்கார்ட் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த பின்னி பன்சால் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை