உபரி நிதி ரூ.10 லட்சம் கோடி விவகாரம் உர்ஜித்தை அழைத்து மோடி சமரசம்?: அரசுடன் கருத்து வேறுபாடு தீர நடவடிக்கை

தினகரன்  தினகரன்
உபரி நிதி ரூ.10 லட்சம் கோடி விவகாரம் உர்ஜித்தை அழைத்து மோடி சமரசம்?: அரசுடன் கருத்து வேறுபாடு தீர நடவடிக்கை

புதுடெல்லி: மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கடந்த ஒரு மாதமாக கருத்துவேறு அதிகரித்து வந்தது. இதையடுத்து, பிரச்னையை தீர்க்க கடந்த வாரம் பிரதமர் மோடியை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் சந்தித்து பேசியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தலைநகர் டெல்லிக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாகவும் அதன் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளையும் படேல் சந்தித்து பேசியுள்ளார். தேர்தல் ஆண்டு என்பதால், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடன் திட்டங்களுக்கான விதிகளை எளிதாக்க வசதியாக ரிசர்வ் வங்கியின் கையிருப்பு முதலீட்டு அளவைக் குறைப்பது தொடர்பான பிரச்னையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி செய்வதற்கான விதிமுறைகளை எளிதாக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் கடனுதவி வழங்க வங்கி சாரா நிதி நிறுவனங்களை மேம்படுத்தும் யோசனையை மத்திய அரசு ஏற்றதா என தெரியவில்லை. ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள கையிருப்பு முதலீட்டில் உபரி நிதியை எந்த அளவுக்கு மத்திய அரசுக்கு விடுவிக்க முடியும் என்பது பற்றிய விஷயமும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. * பதற்றம் ஏன்?: தன்னுடைய பரிந்துரையை ஏற்க மறுத்த ரிசர்வ் வங்கியை வழிக்குக் கொண்டுவர இதுவரை பயன்படுத்தபடாமல் இருந்த ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7ஐ பயன்படுத்தி தன்னுடை உத்தரவுபடி செயல்பட மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி - மத்திய அரசு இடையே கருத்துவேறுபாடு அதிகரித்தது. ஒருகட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது. இதனால், ரிசர்வ் வங்கியை அரசு அச்சுறுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.* சர்ச்சை பேச்சு: ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கிவிடும் எனவே இந்த விஷயத்தில் எந்த சமாதானத்தையும் ஏற்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் அளித்த பேட்டியில், அரசுக்கு எந்த நிதி தேவையும் இல் லை. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை விடுவிக்குமாறு கேட்கவில்லை என்றும் மறுத்திருந்தார். ரிசர்வ் வங்கியின் கையிருப்பு முதலீடு அளவை வரையறை செய்வது குறித்து விவாதிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது என்று கூறினார். * ரிசர்வ் வங்கி தன்னிடம் 9.59 லட்சம் கோடி அளவுக்கு நிதியை கையிருப்பாக வைத்துள்ளது.* ரிசர்வ் வங்கியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில், அரசு நியமன இயக்குனர்கள் மற்றும் சில இயக்குனர்கள், இடைக்கால டிவிடன்ட் மற்றும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு முதலீடு அளவு குறித்து வரையறை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்று தெரிகிறது.* இருப்பினும், ரிசர்வ் வங்கியின் பொருளாதார கையிருப்பு முதலீடு அளவு குறித்து வரையறை செய்ய வேண்டும் என்றால் அதற்கு ரிசர்வ் வங்கியின் சட்டம் 1934ல் திருத்தம் செய்ய வேண்டும்.* சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி செய்யவதற்கு விதிமுறைகளை எளிமைபடுத்துவது, கையிருப்பு உபரி நிதியை அரசுக்கு விடுவிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று நம்பகுத்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை