ஒரு லட்சம் விசைத்தறிகள் 10 நாளாக நிறுத்தம் ரூ.320 கோடி உற்பத்தி பாதிப்பு: கோவை, திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை

தினகரன்  தினகரன்
ஒரு லட்சம் விசைத்தறிகள் 10 நாளாக நிறுத்தம் ரூ.320 கோடி உற்பத்தி பாதிப்பு: கோவை, திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை

கோவை: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறிகளில் பணியாற்றும் ஒரு லட்சம் பேர் தீபாவளி முடிந்து பணிக்கு திரும்பாததால், ஒரு லட்சம் விசைத்தறிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரூ.320 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறி இயங்குகிறது. இதில் ஒரு விசைத்தறியில் தினசரி 70 மீட்டர் வீதம் ஒரு நாளைக்கு ரூ.42 கோடி மதிப்பிலான 1.40 கோடி மீட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் தொழிலாளர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தீபாவளியை முன்னிட்டு கடந்த 4ம் தேதி சொந்த ஊர் சென்றனர்.  சொந்த ஊருக்கு சென்ற ஒன்றரை லட்சம் பேரில் 50 ஆயிரம் பேர் மட்டும் கடந்த ஓரிரு நாட்களாக திரும்பியுள்ளனர். மீதமுள்ள ஒரு லட்சம் பேர் திரும்பவில்லை. இதனால் நேற்றைய நிலவரப்படி கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் விசைத்தறிகளில் ஒரு லட்சம் விசைத்தறி இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பணிக்கு  திரும்ப மேலும் சில நாட்கள் ஆகும் என கருதப்படுகிறது. இதனால் விசைத்தறி ஜவுளி துணி உற்பத்தியில் முடக்கம் நீடிக்கிறது. இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் தலைவர் பழனிசாமி, செயலாளர் குமாரசாமி, பொருளாளர் பூபதி ஆகியோர் கூறியதாவது:  விசைத்தறி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் அதிகபட்சம் 13 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டது. போனஸ் வாங்கிய கையோடு சொந்த ஊர் செல்வது வழக்கம். இவர்கள் தீபாவளிக்கு பிறகு ஓரிரு நாளில் பணிக்கு திரும்புவார்கள். தற்போது தீபாவளி முடிந்து ஒரு வாரமாகியும் ஒரு லட்சம் பேர் திரும்பவில்லை. இதனால் ஒரு வாரத்தில் சுமார் ரூ.320 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் படிப்படியாக வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனினும் 10 சதவீதம் பேர் வருவது சந்தேகம் தான். மீதி பேர் வந்தாலும், அதில் 10 சதவீதம் பேர் வேறு தொழிலுக்கோ, வேறு பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கோ இடம் மாறுவார்கள். இதனால் மொத்தம் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பற்றாக்குறை ஏற்படும். அதை ஈடுகட்ட புதிய தொழிலாளர்களை தேடி, அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை சம்பள முன்பணம் (அட்வான்ஸ் தொகை) கொடுத்து அழைக்க வேண்டும். இதனால் விசைத்தறி உற்பத்தி முழுமையாக சீரடைய ஒரு மாதமாகும். இவ்வாறு விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர்.

மூலக்கதை