மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி

புரோவிடென்ஸ்:  மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது. மகளிருக்கான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் ஆட்டங்கள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புரோவிடென்ஸ் நகரில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டத்தில், ஆஸ்திரேலிய மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின.   டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அபாரமாக பந்து வீசினர்.

இதனால் அயர்லாந்து அணி ரன்களை எடுக்க திணறியது. அயர்லாந்தால், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக கிம் காரத் 24 ரன்கள் எடுத்தார்.

94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

9. 1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலிசா ஹீலி 31 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 56 ரன்கள் எடுத்தார்.

அவருக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது. இது, ஆஸ்திரேலிய அணி பெற்ற 2வது வெற்றியாகும்.

இன்றைய ஆட்டத்தில், தென் ஆப்ரிக்கா-இலங்கை மற்றும் அயர்லாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

.

மூலக்கதை