இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு எதிரொலி: பொதுத்தேர்தலா... நம்பிக்கை வாக்கெடுப்பா?...உச்சநீதிமன்றத்தில் 2ம் நாளாக இன்று முக்கிய விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு எதிரொலி: பொதுத்தேர்தலா... நம்பிக்கை வாக்கெடுப்பா?...உச்சநீதிமன்றத்தில் 2ம் நாளாக இன்று முக்கிய விசாரணை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அந்நாட்டில் அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தல் நடத்தப்படுமா, அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாளாக முக்கிய விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் முடிவுக்கு எதிராக, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 11 மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது.

இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை ஐந்தரை மணி வரை  நீடித்தது. ‘வழக்கில் முக்கிய அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடலாம்’ என,  எதிர்பார்க்கப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.   இந்நிலையில் வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

முன்னதாக, இலங்கையில் அரசியல் நெருக்கடி முற்றிய நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்தார்.

வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

‘அதிபரின் முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ எனக் கூறி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் 11 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின்படி அதிபர் சிறிசேனா, ‘நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து வெளியிட்ட அறிவித்தல் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும்.

அத்துடன், மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை பொதுத் தேர்தலை இடைநிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், இன்று நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பல்ேவறு கட்சிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பெருமளவில் கூடியுள்ளனர்.

இன்று இறுதிகட்ட விசாரணை நடக்க உள்ளதால், இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது நாடாளுமன்றம் மூலம் ராஜபட்சே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள போகிறாரா அல்லது பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமருக்கான அதிகாரத்தை பெறுவாரா என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

கடந்த சில வாரங்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண மற்றும் குழப்பங்களுக்கு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நிரந்தர தீர்வாக அமையும் என்று அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

.

மூலக்கதை