'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் பத்திரிகையாளர் சாட்சியம்

தினமலர்  தினமலர்
அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய் பெண் பத்திரிகையாளர் சாட்சியம்

புதுடில்லி, 'ஏஷியன் ஏஜ்' உள்ளிட்ட ஆங்கில பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய, எம்.ஜே.அக்பர், 67, பா.ஜ.,வில் இணைந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி உட்பட, பல பெண்கள், அவர் மீது புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அக்பர், பிரியா ரமணி மீது, அவதுாறு வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'சண்டே கார்டியன்' பத்திரிகையில், அக்பருடன் பணியாற்றிய, ஜோயிதா பாசு நேரில்ஆஜராகி, சாட்சியம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:நான், அக்பருடன், 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். மிகச் சிறந்த பத்திரிகையாளர், சிறந்தஆசிரியர் என்பதுடன், சிறந்த பண்பாளராகவும் அவர் திகழ்ந்தார்.

'மீ டூ' என்ற பெயரில்,பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து தெரிவித்தனர். அந்த வகையில், பெண் பத்திரிகையாளரான பிரியா ரமணி, மத்திய அமைச்சராக இருந்த அக்பர் மீது, புகார் கூறினார்.இது தொடர்பாக, பிரியா ரமணி வெளியிட்ட, 'டுவிட்டர்' சமூக வலைதள செய்திகளை படிக்கும்போது, அது திட்டமிட்டு, அக்பரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டதாகவே தெரிகிறது.

அக்பருடன் நான் பணியாற்றியபோது, ஒரு சிறு அத்து மீறல்கள் கூட நடந்ததில்லை. பிரியாவின் புகாரை அடுத்து, அக்பர் குறித்து, பலரும் என்னிடம் விசாரித்தனர். சமூகத்தில் அவர் மீதான மரியாதையை குலைக்கும் வகையில் தான், இந்த புகார்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, வரும், டிச., 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை