ரோட்டில் செல்லும் வாகனங்களை நிறுத்தி இன்ப அதிர்ச்சி தரும் அபுதாபி போலீசார்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
ரோட்டில் செல்லும் வாகனங்களை நிறுத்தி இன்ப அதிர்ச்சி தரும் அபுதாபி போலீசார்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

அபுதாபி: அபுதாபியில் குறிப்பிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தும் ரோந்து போலீசார், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பரிசு வழங்கி பாராட்டி வருகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், ரோந்து செல்லும் போலீசார் அவ்வப்போது குறிப்பிட்ட சில வாகனங்களை தடுத்து நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகள் என்னவோ, ஏதோ, அபராதம் விதிக்கப்போகிறார்களோ என்று பயந்து பார்த்தால், ரோந்து வாகனத்தில் வரும் போலீசார், அவர்களுக்கு பரிசு தந்து பாராட்டுகின்றனர். அதாவது, பாதுகாப்பாக வாகனங்களை இயக்குபவர்களை போலீசார் ஊக்குவித்து வருகின்றனர். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றும் வாகன ஓட்டிகளை இந்த ரோந்து போலீசார் பரிசு வழங்கி பாராட்டி வருகின்றனர். இந்த ரோந்து படையினர், ‘ஹேப்பி பேட்ரோல்’ என்று அழைக்கப்படுகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் அபுதாபி காவல்துறையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.போக்குவரத்து போலீசார் என்றால், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, அவர்களை மிரட்டுவது போன்றவை மட்டும் பணியல்ல. நன்றாக ஓட்டுபவர்களை பாராட்டுவதும் கூட ஒரு வகையில் சிறப்பான நடவடிக்கைதான் என்கின்றனர் போலீசார். வாகனங்களுக்கு இடையே சரியான இடைவெளி, சீட் பெல்ட் அணிந்திருப்பது, சாலைகளில் திரும்பும்போது சமிக்ஜை எழுப்புவது, சரியான வேகத்தில் வாகனங்களை இயக்குவது உள்ளிட்டவற்றை பின்பற்றுவோர் சரியான ஓட்டுனராக ரோந்து போலீசாரால் அடையாளம் காணப்படுகின்றனர். அதுபோன்ற ஓட்டுனர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அபுதாபியில் வசிக்கும் இந்தியரான தீபக் கூறுகையில், “எனது காரை நிறுத்திய போலீஸ் அதிகாரி, பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவதற்கு நீங்கள் ஒரு உதாரணம் என கூறியபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னை பாராட்டி எனக்கு சான்றிதழ் வழங்கினார்கள்” என்றார்.

மூலக்கதை