காசா எல்லையில் இஸ்ரேல்-ஹமாஸ் படைகள் மீண்டும் கடும் மோதல்: 7 பேர் பலி

தினகரன்  தினகரன்
காசா எல்லையில் இஸ்ரேல்ஹமாஸ் படைகள் மீண்டும் கடும் மோதல்: 7 பேர் பலி

காசா, சிட்டி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே உள்ள காசா எல்லையில் இஸ்ரேல் வீரர்களும், ஹமாஸ் படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் இஸ்ரேல் வீரர் ஒருவரும், பாலீஸ்தீனத்தை சேர்ந்த 6 பேரும் பலியாயினர். பாலஸ்தீன போராளிகளுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே காசா எல்லையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரை 3 போர்கள் நடந்துள்ளன. இரு தரப்பினர் இடையே கடந்த மார்ச் மாதம் மீண்டும் மோதல் வெடித்தது. இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 227 பேர் கொல்லப்பட்டனர். இதனால் 4வது முறையாக போர் ஏற்படும் என அச்சம் நிலவியது. அமைதி நடவடிக்கை காரணமாக காசா எல்லையில் கடந்த சில மாதங்களாக அமைதி நிலவியது. இந்நிலையில் காசா எல்லையில் கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேல் வீரர்கள், தனியார் கார் ஒன்றில் ஊடுருவியதாக ஹமாஸ் படையினர் குற்றம் சாட்டினர். இதனால் இரு தரப்பினர் இடையே மீண்டும் நேற்று முன்தினம் மோதல் வெடித்தது. இதையடுத்து விமானம் மூலம் இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியது. பாலஸ்தீன பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி 10 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில் இரண்டை, இஸ்ரேல் ஏவுகணைகள் நடுவானில் தடுத்து அழித்தன. மற்றவை எங்கு விழுந்தன என்ற விவரம் தெரியவில்லை. இந்த மோதலில் இஸ்ரேல் வீரர் ஒருவரும், ஹமாஸ் கமாண்டர் உட்பட பாலஸ்தீனர்கள் 6 பேரும் பலியாயினர். முதல் உலகப் போர் நிறைவடைந்ததன் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பிரான்ஸ் சென்றிருந்தார். காசா எல்லையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் பிரான்ஸ் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

மூலக்கதை