சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது

தினமலர்  தினமலர்
சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது

புதுடில்லி:கடந்த அக்டோபரில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ஓராண்டு காணாத வகையில், 3.31 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:காய்கறிகள், பழங்கள், சமையல் உணவு வகைகள், புரதச் சத்து பொருட்கள் ஆகியவற்றின் விலை, அக்டோபரில் குறைந்து இருந்தது. அதனால், அம்மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 3.31 சதவீதமாக குறைந்தது.
இது, செப்டம்பரில், 3.70 சதவீதம்; கடந்த ஆண்டு, அக்டோபரில், 3.58 சதவீதமாக இருந்தது.சில்லரை பணவீக்கம், 2017, செப்டம்பரில், 3.28 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக காணப்பட்டது.அதன் பின், இந்தாண்டு, அக்டோபரில் தான், இந்த அளவிற்கு சற்று நெருக்கமாக, சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது.செப்டம்பரில், காய்கறிகள் பணவீக்கம், மைனஸ், 4.15 சதவீதமாக குறைந்து இருந்தது. இது, அக்டோபரில், 8.06 சதவீதமாக சரிவடைந்துள்ளது.செப்டம்பரில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 0.51 சதவீதமாக உயர்ந்திருந்தது. இது, அக்டோபரில், மைனஸ், 0.86 சதவீதமாக காணப்பட்டது.இதே காலத்தில், பழங்கள் பிரிவின் சில்லரை பணவீக்கம், 1.12 சதவீதத்தில் இருந்து, 0.35 சதவீதமாக குறைந்து உள்ளது.
புரதச் சத்து நிறைந்த தானியங்கள், முட்டை, பால் மற்றும் இதர பொருட்களின் சில்லரை விலை பணவீக்கமும், சரிவைக் கண்டுள்ளது.அதேசமயம், அக்டோபரில், எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவின் சில்லரை விலை பணவீக்கம், 0.08 சதவீதம் அதிகரித்து, 8.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது, செப்டம்பரில், 8.47 சதவீதமாக இருந்தது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மொபைல் போன், ‘ஆப்’மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம், மொபைல் போன், ‘ஆப்’ மூலம், மாதாந்திர சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கிட திட்டமிட்டு உள்ளது.நுகர்வோர், பல்வேறு பொருட்களை வாங்க செலவிடுவது தொடர்பான ஆய்வறிக்கையை, அமைச்சகம் மாதந்தோறும் தயாரிக்கிறது. ஆய்வு மேற்கொண்ட கடைகளை உள்ளடக்கிய, நகரங்கள் மற்றும் கிராமப்புற சந்தைகள், குத்துமதிப்பாக தேர்வு செய்யப்படுகின்றன.இவ்வாறு தேர்வு செய்த, 310 நகரங்கள், 1,181 கிராமங்களைச் சேர்ந்த, 1,114 சந்தைகளின் விற்பனை பொருட்கள் விலை அடிப்படையில், சில்லரை பணவீக்க புள்ளிவிபரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆய்வு அனைத்தும், வலைதளங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது.தரவு பதிவு, பதிவேற்றம், கண்காணிப்பு ஆகிய பணிகளை, அரசின் இரு வலைதளங்கள் மேற்கொள்கின்றன.அடுத்து, இந்த ஆய்வில், மொபைல் போன் ஆப் பயன்படுத்தவும், ஆய்வுக்கான சந்தைகளை, 2,600 ஆக உயர்த்தவும், திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சில்லரை பணவீக்கம் குறித்து மேலும் துல்லியமான புள்ளி விபரங்களை பெறமுடியும்.
அடுத்த ஆண்டு, மொபைல் போன் ஆப் மூலம், புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும். இதற்கான தரவுகளை சேகரிக்க, தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.அடுத்து, மாநிலம் மற்றும் பிராந்திய சில்லரை விலை பணவீக்க விபரங்கள் வெளியிடப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை