ஊட்டி 'சிந்தடிக்' ஓடுதள பணியில்...'ஆமை' வேகம்! அதிருப்தியில் விளையாட்டு வீரர்கள்

தினமலர்  தினமலர்
ஊட்டி சிந்தடிக் ஓடுதள பணியில்...ஆமை வேகம்! அதிருப்தியில் விளையாட்டு வீரர்கள்

ஊட்டி:ஊட்டியில்,'சிந்தடிக்' ஓடுதளம் அமைக்கும் பணி 'ஆமை' வேகத்தில் நடப்பதால், விளையாட்டு வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.மலை மேலிடப் பயிற்சி மையமாக உள்ள, ஊட்டி எஸ்.ஏ.டி.பி., மைதானம், தடகளம் மற்றும் கால்பந்து விளையாட்டுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த மைதான ஓடுதளத்தில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையிலான பயிற்சியை மேற்கொள்வதற்கு வசதியாக, 7 கோடி ரூபாய் செலவில் சிந்தடிக் (செயற்கை இழை) ஓடுதளமாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு துவக்கப்பட்டது.
சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் மந்த கதியிலான பணியால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், சிந்தடிக் ஓடு தளம் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது. அதன்பின், தொடர்ந்து மந்த கதியில் பணிகள் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டினாலும், பணிகள் முழுமை பெறுவதில் ஏற்பட்டுள்ள இழுபறியால் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜென் சுசிலா கூறுகையில், '' சிந்தடிக் ஓடுதளம் பணி இறுதி கட்டத்தை எட்டினாலும், வெயில் தென்பட்டால் மட்டுமே, பணிகளை முடிக்க முடியும். மழையால் ஏற்படும் காலநிலை மாற்றத்தாலும், பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், பணி முழுமை பெறுவது குறித்து தற்போது தெரிவிக்க முடியாது,'' என்றார்.

மூலக்கதை