நடைதிறக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் சபரிமலை செல்கிறார் பினராயி விஜயன் : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை பார்வையிடுகிறார்

தினகரன்  தினகரன்
நடைதிறக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் சபரிமலை செல்கிறார் பினராயி விஜயன் : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை பார்வையிடுகிறார்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்க இன்னும் 4 நாட்களே உள்ளது. இந்த நிலையில் பக்தர்களுக்கு எந்தவித வசதியும் செய்யப்படவில்லை. இதனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்னும் 2 தினங்களில் சபரிமலை செல்ல திட்டமிட்டு இருக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடத்துக்கான மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதற்காக 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆனால் பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை. பம்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டது.இதையடுத்து அங்கு சீரமைப்பு பணிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால் காலதாமதமாகவே இந்த பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை சீரமைப்பு பணிகள் பாதி கூட முடிவடையவில்லை. இதனால் பம்பையில் பக்தர்கள் தங்கவோ, வாகனங்களை நிறுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வருடம் வரை செய்யப்பட்டிருந்த வசதிகள் எதுவும் பக்தர்களுக்கு இனி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.  பக்தர்கள் தங்கள் வாகனங்களை பம்பையில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கல்லில் தான் நிறுத்த வேண்டும். அங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு பஸ்சில் தான் பம்பைக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் மண்டல பூஜைக்கு நடை திறக்க 4 நாட்களே இருப்பதால் சபரிமலையில் எந்த வசதியும் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்னும் ஒரு சில தினங்களில் சபரிமலை சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட தீர்மானித்துள்ளார். நாளை கேரள உயர்நீதிமன்றம் நியமித்த சபரிமலை உயர்மட்ட குழுவின் அவசர ஆலோசனை கூட்டமும் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மேலும் ஒரு சபரிமலை ஆலோசனை கூட்டமும் நடக்கிறது.  மேலும் மண்டல, மகர விளக்கு காலங்களில் சபரிமலை கோயில் பாதுகாப்புக்காக 4 கட்டங்களில் 16 ஆயிரம் போலீசாரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சன்னிதானத்தில் தான் மிக அதிகமாக 1500 போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். பெண் பக்தர்களின் பாதுகாப்புக்காக 60 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 900 பெண் போலீசாரை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர கடற்படை மற்றும் விமானப்படை உதவியுடன் பறக்கும் காமிராவை பயன்படுத்தி கண்காணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை