அகற்றம்

தினமலர்  தினமலர்
அகற்றம்

மதுரை கண்மாய்களில் ஆக்கிரமிப்புகள் உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி -மதுரை:உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு எதிரொலியாக பல்வேறு கண்மாய்களிலுள்ள ஆக்கிரமிப்புக்களை போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.இந்தாண்டு தென் மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் கண்மாய்கள், குளங்கள், வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தண்ணீர் தேங்காமல் வீணானது. வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முதற்கட்டமாக பந்தல்குடி கால்வாய், முடக்கத்தான் கண்மாயில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் வி.ஏ.ஓ., பேச்சியம்மாள், வருவாய் ஆய்வாளர் மோகன்ராஜ் முன்னிலையில் பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் (நீர் வள ஆதாரம்) தலைமையில் பாசன ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் நேற்று அகற்றினர். குலமங்கலம் கிளை கால்வாயை ஆக்கிரமித்து நடத்தப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு கம்பெனியின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. மற்ற நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளும் படிப்படியாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை