'ரபேல்' ஒப்பந்த விவகாரம்: ஆவணம் சமர்ப்பிப்பு

தினமலர்  தினமலர்
ரபேல் ஒப்பந்த விவகாரம்: ஆவணம் சமர்ப்பிப்பு

புதுடில்லி : பிரான்ஸ் நாட்டின், 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, 'ரபேல்' போர் விமானங்களை வாங்குவதற்கான முடிவு எடுக்க மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் அடங்கிய ஆவணத்தை, மனுதாரர்களிடம், மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது.



ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, நம் விமான படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர், வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முடிவு எடுக்க, பின்பற்றப்பட்ட நடவடிக்கைககள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்' என, கோரியுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்கள் கோரிய தகவல்களை அளிக்கும்படி, அக்., 30ல், உத்தரவிட்டது. இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முடிவு எடுக்க பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணத்தை, மனுதாரர்களிடம், மத்திய அரசு நேற்று சமர்ப்பித்தது.ரபேல் விமானங்களின் விலைப்பட்டியல் குறித்த விபரங்கள், சீலிட்ட கவரில் வைத்து, மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மூலக்கதை