அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது! ஜனாதிபதிக்கு சிக்கல்?

PARIS TAMIL  PARIS TAMIL
அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது! ஜனாதிபதிக்கு சிக்கல்?

நான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படாமை காரணமாக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இதனை தெரிவித்தார்.
 
இந்நிலையில், அரசியலமைப்பின் கோட்பாடுகளை நிலைநாட்டல் மற்றும் அதனை முறையாக அமுல்செய்வதனை உறுதிப்படுத்தல் என்பவற்றுக்காக நாம் உயர்நீதிமன்றத்தினை நாடியிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
 
எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 
 
அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களும் அரசியலமைப்பிற்கு முரணான பாராளுமன்றக் கலைப்பிற்கு நீதிகோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன.
 
அரசியலமைப்பின் கோட்பாடுகளை உறுதி செய்துகொள்வதற்கும், அரசியலமைப்பு சரியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் இவ்விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம்.  
 
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மனுத்தாக்கல் செய்ததுடன், அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிடுகையிலேயே பணிப்பாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 

மூலக்கதை