தவான், ரிஷப் பன்ட் அதிரடி: கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி...டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் டோட்டல் சரண்டர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தவான், ரிஷப் பன்ட் அதிரடி: கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி...டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் டோட்டல் சரண்டர்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான், ரிஷப் பன்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் கடைசி பந்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இத்தொடரை 3-0 என வாஷ் அவுட்டில் கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடியது.

டெஸ்ட், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையயோன 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்கியது.
கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

லக்ேனாவில் நடந்த 2வது போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு நடந்தது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் குல்தீப், பூம்ராவுக்கு பதிலாக சாஹல், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓபனர்கள் ஷாய் ஹோப் - ஹெட்மயர் ேஜாடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 51 ரன்களை குவித்தனர். ஹோப் 24 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஹெட்மயர் 26 ரன் (21 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

தினேஷ் ராம்தின் 15 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 12. 5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில், டேரன் பிராவோ - நிகோலஸ் பூரன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தது.

15 ஓவர் முடிவில் அந்த அணி 117 ரன் மட்டுமே எடுத்த நிலையில், 150 ரன்னை தாண்டுவதே சிரமம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் பூரன் அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

பூரன் 24 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. பிராவோ 43 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), பூரன் 53 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கலீல் முகமது வீசிய கடைசி ஓவரில் மட்டும் 23 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் சாஹல் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி 20 ஓவரில் 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோகித் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

அவருக்கு பதிலாக ஆட வந்த லோகேஷ் ராகுலும் 10 ரன்களில் ஆட்டமிழக்க 5,2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 45 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பன்ட். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தது.

ஒருமுனையில் பன்ட் அதிரடியாக ரன்களை குவிக்க, மறுமுனையில் பொறுப்பாக ஆடினார் தவான். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 130 ரன்களை குவித்தது.

தவான் 62 பந்துகளை சந்தித்து (10 பவுன்டரிகள், 2 சிக்சர்) 92 ரன்கள் குவித்தார். பன்ட் 38 பந்துகளில் (5 பவுண்டரி, 3 சிக்சர்) 58 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

வெற்றிக்கு 8 ரன்களே தேவை என்ற நிலையில் 19வது ஓவரில் கீமோ பால் பந்தில் பன்ட் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் 20வது ஓவரில் தவானும் அவுட்டானார்.

ஒரு பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், கடைசி பந்தை மனிஷ் பாண்டே தட்டி விட்டு ஓடி, அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக இந்திய அணியின் பவுலர் குல்தீப் யாதவ் தேர்வானார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கூறுகையில், ‘‘வழக்கமாக ஐபிஎல் போட்டிகளில்தான் இந்த த்ரில் இருக்கும்.

அதே போல ஒரு போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. பந்துவீச்சின் போது நெருக்கடியை சமாளிக்க, இந்திய அணி இன்னும் கூடுதலாக முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் கூறுகையில், ‘‘இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், நல்ல முடிவாக இருந்திருக்கும்’’ என்று தெரிவித்தார்.


.

மூலக்கதை