கடன் வாங்கியாவது மனைவி, குழந்தைகளை கணவர் பராமரிக்க வேண்டும் : பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கடன் வாங்கியாவது மனைவி, குழந்தைகளை கணவர் பராமரிக்க வேண்டும் : பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர் : கடன் வாங்கியாவது மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிப்பதுதான் கணவரின் கடமை என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த பெண் ஒருவர், அவரது கணவர் பராமரிப்பு செலவுக்காக வழங்க வேண்டிய ரூ. 91,000 பணத்தை கொடுக்கவில்லை என பஞ்சாப் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவரது கனவருக்கு 12 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அந்த இளைஞர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் மனைவிக்கு உரிய பராமரிப்பு தொகை வழங்கவில்லை என்றால், அதிகப்பட்சமாக ஒரு மாதம் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி மதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த இளைஞரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். மேலும் கணவரின் முதல் மற்றும் முன்னணி கடமையே மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிப்பதே என நீதிபதி கூறினார். மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிக்க கணவர் யாசகம் செய்யலாம், அல்லது கடன் வாங்கலாம், ஏன் திருட கூட செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். கணவரால் கைவிடப்பட்ட மனைவி மற்றும் குழந்தைகள் பணம் இல்லாமல் எப்படி தங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, அத்தியாவசிய தேவைகளுக்காகவே கைவிடப்பட்ட மனைவி மற்றும் குழந்தைகளுக்காக பராமரிப்பு தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை