மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல் (கோவிந்தன்) நினைவேந்தள்..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல் (கோவிந்தன்) நினைவேந்தள்..

மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல் (கோவிந்தன்) நினைவேந்தலும் 10. 11. 18 காலை 10 மணிக்கு இராசரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது.

விடுதலை ஆசிரியர் கி வீரமணி அவர்கள், செம்மல் படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினார். தனித்தமிழ் இயக்கத்தில் பாடுபட்டதுடன், நன்னன் அவர்களின் உடனிருந்து பெரியார் வழியைப் பின்பற்றியவர்; செம்மல் தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து மீள முடியாது என்கிற நிலையில், தனக்குச் செலவிடும் பெரும் தொகையை ஏழை மக்களுக்குப் பயன்பட மருத்துவ மனைக்குக் கருவிகள் வாங்க வழங்குமாறு கூறிய செம்மல் அவர்களுடைய உள்ளம் பாராட்டுதற்குரியது என்று வீரமணி கூறினார்.

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க தலைவர் கருணாநிதி, வங்கிப் பணியில் செம்மல் கடுமையாக உழைத்ததுடன், எல்லோருக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு மிகுதியாக உதவினார் என்று கூறினார்.

தமிழ் எழுச்சிப் பேரவைச் செயலர் முனைவர் பா இறையரசன் பேசும் போது, பூண்டிக் கல்லூரியில் தானும் செம்மலும் படித்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்; உலகத் தமிழ்க் கழகம் தொடங்கியதையும், பாவாணரை அழைத்து, மாநாடு நடத்தியதையும், மாந்தன் பிறந்த இடம் தமிழகமே எனப் பாவாணர் அறிவித்ததையும் தெரிவித்தார். மேலும் பெருஞ்சித்திரனார், பாவாணர், பேராசிரியர் இளவரசு, வாடாத் தமிழ் மேல் நடந்த வண்ணத்தமிழ்க் குமரன், ம.இலெ. தங்கப்பா ஆகியோருடன் தனித்தமிழ்ப் பணி செய்து வளர்த்ததையும் குறிப்பிட்டார்.

பேராசிரியர் சுப வீரபாண்டியன் பேசுகையில், நன்னன் ஐயா தொலைக் காட்சியில் தமிழ் சொல்லிக் கொடுக்கும் எளிய பாங்கையும் பெரியார் வழியில் உறுதியாக நின்றதையும் பாராட்டினார்.

ஆசிரியர் வீரமணி அவர்களிடம், பெரியார் மைய மருத்துவ மனைக்கு அல்ட்ரா சவுண்டு கருவி வாங்க நன்னன் ஐயாவின் துணைவியார் பார்வதி அம்மையார் அவர்கள், "நன்னன் குடி" சார்பாக நான்கு இலட்சத்து இரண்டாயிரம் உரூபாய்க்குக் காசோலை வழங்கினார்.

ஏராளமான தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் பெரியார் கொள்கைப் பற்றாளர்களும் வங்கி ஊழியர்களும் உற்றார் உறவினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அவ்வை தமிழ்ச்செல்வன் தொகுத்துரை வழங்கினார்.
வேண்மாள் செம்மல் நன்றி கூறினார்.

மூலக்கதை