வீடுவீடாக சென்று ஓட்டு கேட்கும் பசு மாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீடுவீடாக சென்று ஓட்டு கேட்கும் பசு மாடு

சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதசேம், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை ேதர்தல் பிரசாரம் நடைபெற்று வரும்நிலையில், இன்று சட்டீஸ்கர் மாநிலத்தில்  முதற்கட்டமாக 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. ராஜஸ்தானின் 200 சட்டசபை தொகுதிகள், ெதலங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல்  துவங்கியது.

இம்மாநிலங்களில் வரும் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 22ம் தேதி கடைசிநாள்.

டிசம்பர் 7ம் தேதி ஒரேகட்டமாக  தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் இன்று, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.

ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளின் பிரசாரம்  தீவிரமடைந்துள்ளது.

பூரண மதுவிலக்கு உறுதி
சட்டீஸ்கரில் ஆம்ஆத்மி கோஷம்
 சட்டீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

அதை  வெளியிட்ட, ஆம்ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சரும், சட்டீஸ்கர் ஆம் ஆத்மி பொறுப்பாளருமான கோபால் ராய் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டீஸ்கரில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு  வந்தவுடன், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, குவிண்டாலுக்கு ரூ. 2,600 நிர்ணயிக்கப்படும்.

விவசாயிகளின்  வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.

 இந்த பிரதான தேர்தல் அறிக்கையை தவிர்த்து, ஆம் ஆத்மி சார்பாக ஒவ்வொரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களது தொகுதிசார் பிரச்னைகளுக்கான அறிக்கைகளை  தனித்தனியே வெளியிட்டுள்ளனர்.

பழங்குடியின மக்களை அதிகமாகக் கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்துக்கு பாஜ மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு பெரிய கட்சிகளும் இதுவரையில் என்ன  நன்மைகள் செய்துவிட்டன? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர். மேலும், ‘பயிரிழப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப அறிமுகம் போன்றவற்றுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 20,000  வழங்கப்படும்.

வேலைவாய்ப்புகளை பொருத்த வரையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அத்துடன் ஒப்பந்த வேலைவாய்ப்பு முறை  ஒழிக்கப்படும்.

ஜன் லோக்பால் மசோதா கொண்டுவரப்படும்’ போன்ற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

போபால் சிங்கம் யார்? களத்தில் பாஜ வேட்பாளர்
மத்திய பிரதேச மாநிலம், போபால் வடக்கு தொகுதியில், இரு முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து மறைந்த ரசூல் அகமதுவின் மகள் பாத்திமா சித்திகி, தற்போது பாஜ சார்பில்  போட்டியிடுகிறார்.

இவரின் தந்தை போபாலின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ என்பதால், ஷேர் - ஏ - போபால், அதாவது போபாலின் சிங்கம் என்று அழைக்கப்பட்டார். அவரது மறைவுக்குப் பின்  காங்கிரஸ் கட்சி ஆரிப் அகீல் என்பவருக்கு சீட் தந்ததால் அவரும் 5 முறை எம்எல்ஏ ஆகிவிட்டார்.

அதனால் தற்போது அவரே போபாலின் சிங்கம் என்று அழைக்கப்படுகிறார். அதை  அவரிடமிருந்து மீட்க, பாஜ சார்பில் பாத்திமா களமிறங்கியுள்ளார்.

மேலும், போபாலின் சிங்கம் பட்டத்தை மீட்பதற்காக களம் கண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

போபாலின் சிங்கம் பட்டத்தை  மீட்பாரா பாத்திமா? என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மூத்த தலைவர் கமல்நாத் வெளியிட்டார். அது, பாஜவின் தேர்தல்  அறிக்கையைப் போல் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அதில், பெண்களுக்கு பிஎச்டி வரை இலவச கல்வி, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற அம்சங்கள் இருந்தாலும், மாநிலத்தில் பல  இடங்களில் கோசாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி மாநிலத்திற்கேற்ப வளைந்து கொடுப்பதாக அரசியல்  நோக்கர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.



மியூசிக் மூலம் விழிப்புணர்வு தேர்தல் கமிஷன் அதிரடி
ராஜஸ்தான் மாநிலத்தில், பாஜவைச் சேர்ந்த முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு அமைந்துள்ளது. ராஜஸ்தான் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தும் வகையில், பல்ேவறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.

வாக்காளர்களை கவரும் வகையில், தேர்தல் கமிஷன் புது முயற்சியில்  ஈடுபட்டுள்ளது. தேர்தலில் வாக்கு அளிப்பதை வலியுறுத்தி, ஏழு ஸ்வரங்களின் அடிப்படையில் வாக்காளர்களை கவரும் புதிய திட்டத்தை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது.



அதன்படி, ‘ச’  என்பதற்கு, ‘ஷகரி’ எனப்படும் நகர வாக்காளர்கள், ‘ரி’ என்பதற்கு, ‘ராஜ்ய கர்மி’ எனப்படும் அரசு ஊழியர்கள் என்று, ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் ஏற்ப, ஒவ்வொரு வகையான  வாக்காளர்களை, 25 முதல், டிச. , 1 வரை, ஏழு நாட்களில் சந்தித்து வாக்கு அளிப்பதை வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, உள்ளூர் இசைக் கலைஞர்களுக்கு தேர்தல்  விழிப்புணர்வுகளை வாக்காளர்களிடம் எப்படி கொண்டு செல்லவது என்பது பற்றி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகள் தாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் கமிஷன் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரசார களத்தில் சோனியா தெலங்கானா காங்.

உற்சாகம்
தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா  காந்தி, தெலங்கானா மாநிலத்தில் வருகின்ற 23ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார். இதைதொடர்ந்து வாரங்கலில் பேரணி நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா  மாநிலத்திற்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதியும் நடைபெறும் நிலையில், சோனியாவின் பிரசாரம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று  காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

காரணம், தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணி, தெலங்கானா மாநிலத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், காங்கிரஸ் கட்சியினர் புதிய பிரசார யுக்தியை கையாண்டு வருகின்றனர்.   அதனால் தான், கட்சிப் பணிகளில் இருந்தே ஒதுங்கி இருந்த சோனியா காந்தியை பிரசார களத்தில் தற்ேபாது இறக்கியுள்ளனர்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகின்ற  28, 29 ஆகிய தேதிகளில் தெலங்கானா மாநிலம் மபுக்நகர், காமாம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் நடத்தவுள்ளார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்  என்று கூறும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரசார யுக்தி, முதல்வர் சந்திரசேகர ராவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

புதிய தேர்தல் அதிகாரி யார்?மிசோரம் மாநிலத்தில் பரபரப்பு
மிசோரம் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவிக்கு புதியவரை நியமிக்க பெயர்களை பரிந்துரைக்குமாறு அந்த மாநில தலைமைச் செயலரிடம் வலியுறுத்த தேர்தல் ஆணையம் முடிவு  செய்துள்ளது.

இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘டெல்லியில், மிசோரம் தேர்தல் அதிகாரி புதியதாக நியமனம் செய்வது ெதாடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.   அப்போது, மிசோரம் மாநிலத்துக்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய துணை ஆணையர் சுதீப் ஜெயின் தலைமையிலான  குழு அளிக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
 மிசோரம் தேர்தல் பணிகளில் அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சக முதன்மைச் செயலராக இருந்துவந்த லால்னன்மாவியா சவ்வாங்கா தலையிடுவதாக மாநில தலைமைத் தேர்தல்  அதிகாரி எஸ். பி. ஷசாங் குற்றம்சாட்டியிருந்தார்.

 அதைத் தொடர்ந்து சவ்வாங்கா தேர்தல் பொறுப்புகளிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார்.

அப்போது முதல் ஷசாங்குக்கு எதிராக சில மாணவர் அமைப்புகளும், அரசு சாரா அமைப்பும்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் டெல்லியில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது.

திரிபுராவில் நிவாரண முகாம்களில் உள்ள 11,232  ‘ப்ரூ’ இன மக்களுக்கு மிசோரமில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் என்ஜிஓ அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இம்மாநிலத்தில் வருகிற 28ம்  தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 211 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.


.

மூலக்கதை