சரியாத ஆழியாறு அணை நீர் மட்டம்... குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை அள்ளித்தந்த வானம்!

தினமலர்  தினமலர்
சரியாத ஆழியாறு அணை நீர் மட்டம்... குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை அள்ளித்தந்த வானம்!

பொள்ளாச்சி:ஆழியாறு அணை நீர்மட்டம், மூன்று மாதங்களுக்கு மேலாக, நிரம்பியே உள்ளதால், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லாததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணையாக உள்ளது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்களும்; புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், அணையால், பாசன வசதி பெறுகின்றன.
பாசன திட்ட ஒப்பந்தபடி, கேரளாவுக்கும், பொள்ளாச்சி உட்பட பகுதிகளின், குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக மழைப்பொழிவு இல்லாததால், நீர் இருப்பு குறைந்து, பாசனத்துக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு, நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது.கடந்த ஜூலை மாதம் அணை நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்த தென்மேற்கு பருவமழையால், நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.ஜூலை, 16ல், 100 அடியை, நீர் மட்டம் எட்டிய பிறகு. பாதுகாப்புக்காக, அவ்வப்போது உபரி நீர் திறக்கப்பட்டது. ஆக., 16ல், தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.அதன் பின் மழையளவு குறைந்தாலும் வரத்து சீராக இருந்ததால், அணை நீர்மட்டம் குறையாமல் இருந்தது. தற்போது, புதிய, பழைய ஆயக்கட்டு மற்றும் கேரள பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.எனினும், கடந்த, 119 நாட்களாக அணை நீர்மட்டம், 100 அடிக்கும் குறையாமல் ததும்பியே காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி, நீர் மட்டம், 120 அடிக்கு, 113.20 அடியாக உள்ளது. வினாடிக்கு, 101 கன அடி நீர் வரத்தும், வினாடிக்கு, 413 கன அடிநீர் வெளியேற்றப்பட்டது.தட்டுப்பாடு இருக்காதுஆழியாறு அணை மற்றும் அங்கிருந்து துவங்கும் ஆற்றை ஆதாரமாக கொண்டு, 13 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், பொள்ளாச்சி நகரம் மற்றும் குறிச்சி-குனியமுத்துார் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் முக்கியமானதாகும். மேலும், 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், ஆழியாறு அணை குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போதைய நீர் இருப்பால், கோடை காலம் வரை, குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.
சோலையாறில் சுணக்கம்வால்பாறை மலைத்தொடரில் மழை குறைந்துள்ளதால், சோலையாறு அணைக்கு வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை, 160 அடிக்கு, 147.01 அடி நீர் மட்டம் இருந்தது.வினாடிக்கு, 228 கன அடி நீர் வரத்தும், வினாடிக்கு, 399 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 66.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 419 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மூலக்கதை