டிசம்பருக்குள் 'டிஜிட்டல்' நூலகமாக மாற்ற... இலக்கு! உடுமலையில் முதல் கட்ட பணிகள் துவக்கம்

தினமலர்  தினமலர்
டிசம்பருக்குள் டிஜிட்டல் நூலகமாக மாற்ற... இலக்கு! உடுமலையில் முதல் கட்ட பணிகள் துவக்கம்

உடுமலை:உடுமலை, முதற்கிளை நுாலகத்தை டிஜிட்டல் நுாலகமாக மாற்றும் பணிகளை, டிச., இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உடுமலை முதற்கிளை நுாலகத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நுால்கள் உள்ளன. நுாலகத்தின் செயல்பாடுகள் மற்றும் வாசகர்களின் பயன்பாடு அதிகரித்ததால், ஒவ்வொரு கட்டமாக, நுாலகத்தின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் நுாலகமாக இருப்பதால், தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்த வேண்டுமென, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவில் உள்ள நுாலகங்களில், இடவசதி, புரவலர்கள், வாசகர்கள் மற்றும் நுாலகத்தின் செயல்பாடுகளின் அடிப்படையில், உடுமலை முதற்கிளை நுாலகம் 'டிஜிட்டல் நுாலகமாக', மாற்றுவதற்கு, கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்துக்கு, அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த டிஜிட்டல் நுாலகத்தில், மாற்றுத்திறன் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பிரிவுகள், போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு, 'புரொஜக்டர்' வசதி ஏற்படுத்துதல், நுாலக செயல்பாடுகளை கம்ப்யூட்டர் மயமாக்குதல், கண்பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு 'பிரெய்லி முறை' கூடுதல் கம்ப்யூட்டர் வசதிகளும் வழங்குவதும், இந்த திட்டத்தில் உள்ளது.
நுாலகத்தின் கட்டமைப்பு வசதிகளையும், விரிவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டது. டிஜிட்டல் நுாலக திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென அந்தந்த மாவட்ட நுாலகத்துறைகளுக்கு, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்கான முதற்கட்டப்பணிகள் நுாலகத்தில் துவக்கப்பட்டுள்ளன.நுழைவு வாயிலில் மாற்றம்நுாலகர் பீர்பாஷா கூறியதாவது: எல்காட், பொதுப்பணித்துறைகளின் சார்பில், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கான, நிதி ஒதுக்கீடுகளுக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நுாலகத்தின் முன்புறம், ஜெனரேட்டர் அமைப்பதற்கும், கட்டமைப்பை விரிவுபடுத்தவும், முன்புறம் உள்ள நுழைவாயிலில் மாற்றம் செய்ய வேண்டும். இதனால், முதற்கட்டப்பணிகளாக மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன.இந்த வார இறுதிக்குள், அடுத்தகட்ட பணிகள் துவக்கப்படும் என, தெரிவித்துள்ளனர். டிச., இறுதிக்குள், பணிகளை முடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.அதற்கான பணிகளும் தீவிரமாக நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை