திருவண்ணாமலை தீபத்திருவிழா- 2650 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

திருவண்ணாமலை கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக 2650 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்த நிலையில் தீபத்திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி தொடர்ந்து மூன்று நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி, துர்க்கையம்மன் உற்சவம்  நடக்கிறது.  சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் இருந்து, 11-ந் தேதி இரவு 8 மணியளவில் காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் பவனி வருகிறார். அதைத்தொடர்ந்து,  12-ந் தேதி நடைபெறும் பிடாரி அம்மன் உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் பவனியும், 13-ந் தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் நடக்கிறது.

 திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது:

கார்த்திகை தீபத்திருவிழாவை தரிசிக்க 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே, பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, 2,650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 

மேலும், குறைந்த தூரம் செல்லும் வகையில் 500 பஸ்கள் இயக்கப்படும். 16 இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து நகருக்கு வர வசதியாக 60 இலவச பஸ்கள் இயக்கப்படும். 

நகரையொட்டி 77 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்து இருக்கிறோம்.  இதுதவிர 14 சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே விரைவில் வெளியிட உள்ளது. பரணி தீப தரிசனத்துக்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீப தரிசனத்துக்கு 10 ஆயிரம் பக்தர்களும் இட வசதி அடிப்படையில் கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டு பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது கோயிலுக்குள் செல்போன் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கோர்ட் வழிகாட்டுதலின்படி தீபம் ஏற்றும் மலைமீது சென்று நெய் காணிக்கை செலுத்த 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை