கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக தயாராகும் அகல்விளக்குகள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக தயாராகும் அகல்விளக்குகள்!

கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக மானாமதுரையில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. 

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக இருந்தாலும் மண்பாண்ட தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் மண்பாண்ட தொழில் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் சீசனுக்கு தகுந்தாற்போல, பொம்மைகள் முதல் பானைகள் வரை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலைகள், நவராத்திரிக்கு கொலுபொம்மைகள், கார்த்திகை திருவிழாற்காக அகல் விளக்குகள், பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள், அடுப்புகள் தயார் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் மண்சட்டி, கலயம், பானை, மரக்கன்று வளர்க்க பூந்தொட்டிகள் தயார் செய்கின்றனர்.

ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் தயார் செய்யப்படும் மண்பாண்ட பொருட்களை மதுரை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.

 கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால் மண்பாண்டத் தொழில் முழுமையாக பாதிப்புக்கு உள்ளானது. இதனால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி வீட்டில் முடங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் அடிக்கத் துவங்கியுள்ளதையடுத்து, கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு உள்ளனர். 

மூலக்கதை