ஸ்டேஷன் வந்தாச்சு இறங்குங்க...தூங்கியது போதும்!'கொர்' நபர்களை எழுப்ப அலாரம்!

தினமலர்  தினமலர்

கோவை, நவ. 12 -ரயில் பயணத்தின்போது, இறங்கும் ஸ்டேஷன் குறித்து முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கும் 'டெஸ்டினேஷன் அலர்ட்' வசதி, பயணிகளிடம் பதற்றத்தை போக்கி, அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.மத்திய ரயில்வே அமைச்சகம், பயணிகள் வசதிக்காக 'டிக்கெட்', உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு மொபைல் போன் செயலிகளை அறிமுகம் செய்து வருகிறது.
குறிப்பாக, பாதுகாப்பான பயணத்துக்குக்கு அழைப்பு எண்கள் அறிமுகம் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.உறங்கி விடுவதாலும், அலட்சியம், விழிப்புணர்வின்மையாலும் பயணிகள் சில சமயங்களில் இறங்க வேண்டிய ஸ்டேஷன்களை கடந்து சென்று, அலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பயணிகளின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மொபைல் போனில் ஸ்டேஷன்கள் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு தரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயணிகள், 139 எனும் ரயில்வே எண்ணில் தொடர்பு கொண்டு, 10 இலக்க பி.என்.ஆர்., எண்ணை, எஸ்.எம்.எஸ்., மூலமோ, அழைப்பு வாயிலாகவோ பதிவிட வேண்டும்.
இதன்மூலம், ஸ்டேஷன் நெருங்குவதற்கு, 20 நிமிடங்களுக்கு முன், எஸ்.எம்.எஸ்., அல்லது அழைப்பு 'அலாரம்' மூலம் பயணிகள் உஷார்படுத்தப்படுகின்றனர். இந்த திட்டத்துக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.இரவில் அதிகம்!இரவு, 11:00 முதல் காலை, 7:00 மணி வரை அதிக பயணிகள் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தனியாக பயணிக்கும் பெண்களுக்கு, இச்சேவை மிக பயனுள்ளதாக இருப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை