3வது போட்டியில் ஆஸி. தோல்வி தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா

தினகரன்  தினகரன்
3வது போட்டியில் ஆஸி. தோல்வி தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா

ஹோபர்ட்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 40 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.பெல்லரீவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்க அணி தொடக்க வீரர்கள் குவின்டான் டி காக் 4 ரன், ஹெண்ட்ரிக்ஸ் 8 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மார்க்ராம் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்கா 15.3 ஓவரில் 55 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் டு பிளெஸ்ஸி - டேவிட் மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக 252 ரன் சேர்த்தது.அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். டு பிளெஸ்ஸி 125 ரன் (114 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்), மில்லர் 139 ரன் (108 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன் குவித்தது. ஹென்ரிச் கிளாசன், பிரிடோரியஸ் தலா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஸ்டார்க், ஸ்டாய்னிஸ் தலா 2, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 321 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரர்கள் கிறிஸ் லின் 0, கேப்டன் ஆரோன் பிஞ்ச் 11 ரன்னில் வெளியேற, டிராவிஸ் ஹெட் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 10.1 ஓவரில் 39 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் ஷான் மார்ஷ் - ஸ்டாய்னிஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 107 ரன் சேர்த்தது. ஸ்டாய்னிஸ் 63 ரன் (76 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஷான் மார்ஷ் சதத்தை நிறைவு செய்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. மார்ஷ் 106 ரன் (102 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். கேரி 42 ரன், கிளென் மேக்ஸ்வெல் 35 ரன் எடுக்க, ஸ்டார்க் மற்றும் ஸம்பா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன் மட்டுமே எடுத்து 40 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கம்மின்ஸ் (7), ஹேசல்வுட் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் டேல் ஸ்டெயின், காகிசோ ரபாடா தலா 3, டுவைன் பிரிடோரியஸ் 2, லுங்கி என்ஜிடி 1 விக்கெட் வீழ்த்தினர்.மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை, தென் ஆப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணியின் டேவிட் மில்லர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். அடுத்து இரு அணிகளும் மோதும் டி20 போட்டி குயின்ஸ்லேண்ட் கராரா ஓவல் மைதானத்தில் 17ம் தேதி நடைபெறுகிறது.

மூலக்கதை