சோதனை:கடலுார் மத்திய சிறையில் டி.ஐ.ஜி., தலைமையில்.தீப்பெட்டி, பிளேடு கைப்பற்றல்

தினமலர்  தினமலர்
சோதனை:கடலுார் மத்திய சிறையில் டி.ஐ.ஜி., தலைமையில்.தீப்பெட்டி, பிளேடு கைப்பற்றல்

கடலுார்:கடலுார், மத்திய சிறையில், வேலுார் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை புழல் சிறையில், கைதிகள் நட்சத்திர ஓட்டல் வசதிகளை அனுபவித்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, முக்கிய கைதிகளை போலீசார் வேறு சிறைகளுக்கு மாற்றினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதற்கிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் கடலுார் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.கடலுார் மத்திய சிறையை திடீர் தாக்குதல் நடத்தி, அன்சார் மீரானை மீட்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, கடந்த மாதம் சிறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.இந்நிலையில், கடலுார் மத்திய சிறையில் வேலுார் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதி, கடலுார் டி.எஸ்.பி., லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மோப்ப நாய் 'ஜாக்', வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று காலை 6:00 முதல் 8:00 மணி வரை இரண்டு மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சிறை வளாகத்தில் தீப்பெட்டி, பிளேடு உள்ளிட்டப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மூலக்கதை