ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை: கேப்டன் ஹர்மான்பிரீத் உற்சாகம்

தினகரன்  தினகரன்
ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 இந்தியாபாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை: கேப்டன் ஹர்மான்பிரீத் உற்சாகம்

கயானா: மகளிர் உலக கோப்பை டி20 போட்டித் தொடரில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. பரபரப்பான இப்போட்டி கயானா புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30க்கு தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் நடைபெறும் இந்த தொடர், வெஸ்ட் இண்டீசில் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாசில் வென்று பேட் செய்த இந்தியா, ஜெமிமா ரோட்ரிகியூஸ் - கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.டானியா பாட்டியா 9, ஸ்மிரிதி மந்தனா 2, ஹேமலதா 15 ரன்னில் வெளியேறிய நிலையில், ஜெமிமா - கவுர் இணை 4வது விக்கெட்டுக்கு 134 ரன் சேர்த்தது. ஜெமிமா 59 ரன் (45 பந்து, 7 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட ஹர்மான்பிரீத் சதம் விளாசி சாதனை படைத்தார். சர்வதேச டி20 மற்றும் மகளிர் உலக கோப்பை டி20ல் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. ஹர்மான்பிரீத் 103 ரன் (51 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். வேதா (2), ராதா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன் மட்டுமே சேர்த்து 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க வீராங்கனை சூஸி பேட்ஸ் 67 ரன் (50 பந்து, 8 பவுண்டரி), கேத்தி மார்டின் 39, காஸ்பரெக் 19, அன்னா பீட்டர்சன் 14 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் அறிமுக வீராங்கனை ஹேமலதா, பூனம் யாதவ் தலா 3 விக்கெட், ராதா 2, அருந்ததி 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஹர்மான்பிரீத் கவுர் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்த நிலையில், இந்தியா இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 52 ரன் வித்தியாசத்தில் தோற்றதால், இந்த போட்டியில் கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்த நிலையில் (ஹீலி 48, மூனி 48, கேப்டன் லேன்னிங் 41), பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து தோற்றது. பிஸ்மா மரூப் 26, உமைமா, சனா மிர் தலா 20 ரன் எடுக்க, மற்றவர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் களமிறங்கும் நிலையில், பாகிஸ்தான் முதல் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.தசைப்பிடிப்பை சமாளிக்க சிக்சராக விளாசினேன்...மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் அதிரடியாக சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் பல்வேறு சாதனைகளை வசப்படுத்தினார். சர்வதேச டி20ல் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனையாக முத்திரை பதித்துள்ள அவர் இது குறித்து கூறியதாவது:  காலையில் இருந்தே உடல்நிலை சரியில்லாதது போல உணர்ந்தேன். முதுகு வலியும் இருந்தது. ரன் எடுக்க ஓடியபோது கால்களிலும் தசைபிடிப்பு ஏற்பட்டது. அணி மருத்துவர் கொடுத்த மருந்தை சாப்பிட்ட பிறகு வலி கொஞ்சம் குறைந்தது. ஆனாலும், ரன் எடுப்பதற்காக ஓடி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால் வாய்ப்பு கிடைக்கும்போது பெரிய ஷாட் அடிக்க தயங்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்ததுடன் சதம் விளாசி சாதனை படைக்கவும் முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு ஹர்மான்பிரீத் கூறியுள்ளார். தொடக்கத்தில் 13 பந்தை எதிர்கொண்டு 5 ரன் மட்டுமே எடுத்திருந்த கவுர் பின்னர் 33 பந்தில் அரை சதம் அடித்ததுடன், அடுத்த 50 ரன்னை வெறும் 16 பந்தில் எடுத்து மிரட்டினார். சாதனை வீராங்கனை ஹர்மான்பிரீத்துக்கு இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை