கொள்முதல் விலை சரிவால் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
கொள்முதல் விலை சரிவால் அதிர்ச்சி

நாமக்கல்:கறிக்கோழி உற்பத்தி, 30 சதவீதம் அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலை, ஒரே நாளில், 10 ரூபாய் சரிந்துள்ளது.


தமிழகத்தில், பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப் பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு ---– பி.சி.சி., சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.


தீபாவளி பண்டிகை நேரத்தில் விலை உயரும் என, எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென கொள்முதல் விலை சரிந்தது. அதன்படி, கடந்த, 31ல், 15 ரூபாய் சரிந்து, 84 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, 10 ரூபாய் குறைந்து, 74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, பண்ணையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:ஆறு மாதத்துக்கு முன் கூறப்பட்டதுபோல், தற்போது, 30 சதவீதம் கோழி உற்பத்தி அதிகரித்துள்ளது. அதாவது, வாரத்துக்கு, ஒரு கோடி கோழி உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது, 1.30 கோடி கோழி உற்பத்தி செய்யப்படுகிறது.அதனால், கொள்முதல்விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


முட்டை விலை


நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், 415 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 420 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் --– காசுகளில் :சென்னை, 435; ஐதராபாத், 410; விஜயவாடா, 409; பர்வாலா, 427; மும்பை, 465; மைசூர், 429; பெங்களூரு, 430; கோல்கட்டா, 460; டில்லி, 450 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை