இலங்கையுடன் முதல் டெஸ்ட் : 211 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

தினகரன்  தினகரன்
இலங்கையுடன் முதல் டெஸ்ட் : 211 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 211 ரன் வித்தியாசத்தி வென்றது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன் குவித்தது. அறிமுக வீரர் பென் போக்ஸ் சதம் விளாசி அசத்தினார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 203 ரன்னுக்கு சுருண்டது. ஏஞ்சலோ மேத்யூஸ் அதிகபட்சமாக 52 ரன் எடுத்தார். இதைத் தொடர்ந்து, 139 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (93 ஓவர்). தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் ஆட்டமிழக்காமல் 146 ரன் (280 பந்து, 9 பவுண்டரி) விளாசினார். பர்ன்ஸ் 23, ஸ்டோக்ஸ் 62, பட்லர் 35, போக்ஸ் 37 ரன் எடுத்தனர். இதையடுத்து, 462 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 250 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஏஞ்சலோ மேத்யூஸ் 53, குசால் மெண்டிஸ் 45, கவுசல் சில்வா, தில்ருவன் தலா 30, குணரத்னே 26, டி சில்வா 21 ரன் எடுத்தனர். சுரங்கா லக்மல் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி 4, ஜாக் லீச் 3, ரஷித், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அறிமுக வீரர் பென் போக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் பல்லெகெலே சர்வதேச ஸ்டேடியத்தில் 14ம் தேதி தொடங்குகிறது.

மூலக்கதை