அரிசி, தேயிலை, மசாலா சவுதியில் வர்த்தக வாய்ப்பு

தினமலர்  தினமலர்
அரிசி, தேயிலை, மசாலா சவுதியில் வர்த்தக வாய்ப்பு

புதுடில்லி:சவுதி அரேபியாவில், பல்வேறு பொருட்களுக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆராய, நாளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில், உணவு மற்றும் வேளாண் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோரின் சந்திப்பு, 11ம் தேதி நடைபெறுகிறது. இதில், இந்தியாவில் இருந்து, 25 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.


அரிசி, தேயிலை, மசாலா பொருட்கள், உலர் பழங்கள் ஆகிய நான்கு பிரிவுகளில், ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இந்திய ஏற்றுமதியாளர்கள், சவுதி இறக்குமதியாளர்களுடன் பேச்சு நடத்தி, புதிய வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காண, இந்த சந்திப்பு உதவும்.


கடந்த, 2017ல், இந்தியாவில் இருந்து, 460 கோடி டாலர் மதிப்பிலான உணவு மற்றும் குளிர்பான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இந்தியா, ஏற்றுமதியை அதிகரித்து, வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.இதையொட்டி, சவுதி அரேபியா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை