சிங்கப்பூரில் ஆர்.சி.இ.பி., வர்த்தக மாநாடு : வரி விலக்கு தீர்மானத்திற்கு இந்தியா ஒப்புதல் தருமா?

தினமலர்  தினமலர்
சிங்கப்பூரில் ஆர்.சி.இ.பி., வர்த்தக மாநாடு : வரி விலக்கு தீர்மானத்திற்கு இந்தியா ஒப்புதல் தருமா?

புதுடில்லி:சிங்கப்பூரில், ஆர்.சி.இ.பி., எனப்படும், பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு மாநாடு, 12ம் தேதி துவங்குகிறது.


இரண்டு நாள் நடைபெறும் இம்மாநாட்டில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு உட்பட, 16 உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.இம்மாநாட்டில், சரக்கு, சேவைகள், முதலீடுகள், பொருளாதாரம், தொழில்நுட்ப கூட்டுறவு, அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.


மேலும், உறுப்பு நாடுகளின் பரஸ்பர வர்த்தகத்தில், அதிகபட்ச சரக்குகள் மீதான வரியை குறைப்பது அல்லது நீக்குவது குறித்து, விவாதித்து, முக்கிய முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரி குறைப்பு அல்லது வரி நீக்கம் குறித்து முடிவெடுத்தால், அது, இந்திய சந்தையில், சீனாவின் மலிவு விலை பொருட்கள் குவிய வழிவகுத்து விடும் என, உள்நாட்டு உருக்கு, உலோகம், உணவு பதப்படுத்துதல் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.


அதனால், இம்மாநாட்டில், வரி விலக்கு தீர்மானம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசியான் – ஆர்.சி.இ.பி.,


ஆர்.சி.இ.பி., எனப்படும், பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு அமைப்பில், சிங்கப்பூர், மலேஷியா, மியான்மர், புருனே, கம்போடியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், லாவோஸ், வியட்னாம், இந்தோனேஷியா ஆகிய, 10 ‘ஆசியான்’ நாடுகள் உள்ளன.


இவற்றுடன் சேர்ந்து, தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய, ஆறு நாடுகளும் இடம் பெற்றுள்ளன. ஆசியான் நாடுகள், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியவற்றுடன், இந்தியா தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதுபோல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

மூலக்கதை