அமெரிக்கா தொடர் நெருக்கடி ஏற்றுமதி சலுகையில் சிக்கல்

தினமலர்  தினமலர்
அமெரிக்கா தொடர் நெருக்கடி ஏற்றுமதி சலுகையில் சிக்கல்

திருப்பூர்:அமெரிக்காவின் தொடர் நெருக்குதலால், ஆயத்த ஆடை உட்பட, பல்வேறு வகை பொருட்களின் ஏற்றுமதிக்கான சலுகை உயர்வு, சிக்கலாகி உள்ளது.


உலக வர்த்தக அமைப்பு விதிப்படி, ஒரு நாட்டின் தனி நபர் வருவாய், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து, 1,000 டாலருக்கும் அதிகமாக இருந்தால், அந்நாடு, ஏற்றுமதிக்கு சலுகைகள் வழங்கக்கூடாது.அதன்படி, நம் நாட்டு ஏற்றுமதிக்கு, மத்திய அரசு வழங்கும் அனைத்து வகை சலுகைகளையும் நிறுத்த வேண்டும் என, உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்கா முறையிட்டது.


கடந்த, 2017 ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., அறிமுகமானது; அதன் தொடர்ச்சியாக, ஏற்றுமதி சலுகை விகிதத்தை மத்திய அரசு குறைத்தது.புகார் ஆயத்த ஆடை துறையை பொறுத்தவரை, 7.7 சதவீதம் வழங்கப்பட்ட, ‘டியூட்டி டிராபேக்’, ஜி.எஸ்.டி.,க்குப்பின், 2 சதவீதமாக குறைக்கப் பட்டது; 3.5 சதவீதமாக இருந்த, ‘ஸ்டேட் லெவிஸ்’ சலுகை, 1.7 சதவீதமாக குறைக்கப் பட்டது.


இதுகுறித்து, திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் கிரீஷ் கூறியதாவது:மத்திய அரசு, ஏற்றுமதி சலுகைகளை குறைத்து உள்ளது. ஆனால், உயர்த்தி வழங்குவதாக, உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்கா புகார் அளித்துள்ளது.இதற்கென அமைக்கப்பட்ட கமிட்டியிலும், இதே கருத்தையே அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் நெருக்கடியால், ஏற்றுமதி துறைக்கு நேரடி பயனளிக்கும் சலுகை வழங்க முடியாத நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆயத்த ஆடை துறையை பொறுத்த வரை, ஏற்றுமதி வளர்ச்சி பெற, சலுகைகள் மிக அவசியம்.எனவே, மத்திய அரசு, ஏற்றுமதி துறைக்கு, உலக வர்த்தக அமைப்பு மற்றும் பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காத வகையில், சலுகை திட்டங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை