தத்து என்று கூறி குழந்தைகள் கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: அதிகாரி தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தத்து என்று கூறி குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கூறி உள்ளார். 

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சென்னையில்  அளித்த பேட்டியில் கூறியதாவது:

மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் எல்லையில் ஆராரியா என்ற இடத்தில் இயங்கி வந்த குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய சோதனையில் ஒரு குழந்தை உறுப்பு தானத்திற்காக ஸ்பெயின் நாட்டிற்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் ரூ.4 லட்சம் மதிப்பு) விற்பனை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி உத்தரவின் பேரில் அந்த இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த குழந்தை மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

‘‘தத்தெடுப்பு’’ என்ற பெயரில் பணத்திற்காக நூதன முறையில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த கண்காணிப்பு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் பதில் வரும். 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கண்காணிப்பு குழுவினர் நேரடியாக சென்று விசாரணை நடத்துவார்கள். 

கடந்த 6 மாதத்தில் இந்தியாவில் இருந்து எத்தனை குழந்தைகள் தத்தெடுப்பு என்ற பெயரில் விற்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பட்டியல் முழுமையாக தயாரிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.

 ஏற்கனவே குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் குறித்து புகார்களை தெரிவிக்க ‘‘1098’’ என்ற தொலைபேசி எண் உள்ளது. இந்த புகார் எண்ணை போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளே நேரடியாக தங்களுடைய புகார்களை தெரிவிக்கும் வகையில் புதிய எண் விரைவில் அமல்படுத்தப்படும். 

அதிரடி நடவடிக்கை காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.2 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இனிமேல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

 இவ்வாறு ஆனந்த் கூறினார்.  

மூலக்கதை