சூழலுக்கு ஆபத்து! நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம்:கட்டுப்படுத்த வழியில்லாததால் தீராத அச்சம்

தினமலர்  தினமலர்
சூழலுக்கு ஆபத்து! நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம்:கட்டுப்படுத்த வழியில்லாததால் தீராத அச்சம்

உடுமலை:உடுமலை பகுதியிலுள்ள நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களில், விஷச்செடியான பார்த்தீனியம் அதிகளவு வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை அருகே, 404 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் அமைந்துள்ளது. சுமார் ஆறு கி.மீ., துாரம் கரைகள் உள்ள இக்குளத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
இக்குளத்தின், உள் மற்றும் வெளிப்புற கரைகள் முழுவதையும், விஷச்செடியான பார்த்தீனியம் செடி ஆக்கிரமித்துள்ளது. விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், பார்த்தீனியம் செடிகளிலிருந்து, 7 ஆயிரம்,10 ஆயிரம் விதைகள் காற்று, நீர் மூலம் வேகமாக பரவும்.இச்செடிகள், மண்ணின் வளத்தை கெடுப்பதோடு, புழு, கரையான் உள்ளிட்ட நுண்ணுயிரினங்கள், பயிர்களை வளரவிடாது. இச்செடியை கால்நடைகள் உண்டால் கடும் பாதிப்பையும். கார்பன்டை ஆக்சைடு அதிகம் வெளியேற்றுவதால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும்.சுற்று சூழல், விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் பார்த்தீனியம் செடி, குளத்தை ஆக்கிரமித்துள்ளதால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், சுற்றுப்புற கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குளத்தை முழுமையாக ஆக்கிரமித்து வரும், பார்த்தீனியம் செடிகளை முழுமையாக அகற்றவும், கரைகளை பலப்படுத்தும் வகையில், புற்கள், மரங்கள் நடவு செய்யவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழைக்கு பின் அதிகரிப்பு உடுமலை பகுதியிலுள்ள விளைநிலங்களில், தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, பார்த்தீனியம் செடிகளின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
விளைநிலங்கள் மட்டுமல்லாது, ரோட்டோரங்களில், இச்செடிகள் செழித்து வளர்ந்துள்ளது. பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், செடிகளை அகற்ற, முன்பு உள்ளாட்சி அமைப்புகள் பங்களிப்புடன் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, இத்திட்டத்தை யாரும் கண்டுகொள்ளாததால், பாதிப்பு அதிகரித்துள்ளது.எனவே, வேளாண்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தி, அழிக்க, சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மூலக்கதை