பற்றாக்குறை!

தினமலர்  தினமலர்
பற்றாக்குறை!

விருதை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள்...நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம்-விருத்தாசலம்:விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட உள்ள நிலையில், ஊழியர்கள் பற்றாக்குறை, கூடுதல் கட்டடங்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் பொது, மகப்பேறு, குழந்தைகள் நலன், கண், பல் சம்பந்தமான பிரிவுகளில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் பயனடைகின்றனர். இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி, சிகிச்சை பெறுகின்றனர். புற நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து, தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகை தருகின்றனர். மர்ம காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை குறையவில்லை.அதேபோன்று, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில் விபத்துகளில் சிக்குவோருக்கு இங்குதான் முதலுதவி தரப்படுகிறது. இதன் மூலம் ராமநத்தம், வேப்பூர், பெண்ணாடம், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி, விருத்தாசலம், கம்மாபுரம், ஊ.மங்கலம், மந்தாரக்குப்பம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி 50க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைக்கும், தற்கொலை முயற்சி, விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படுவோர் அழைத்து வரப்படுகின்றனர்.தற்போது, குழந்தைகள் பிரிவில் 3 மருத்துவர்கள், முடநீக்கியல் பிரிவு 2, காது, மூக்கு, தொண்டை 3, மயக்க மருந்து நிபுணர்கள் 3, மகப்பேறு 4 மற்றும் பொது மருத்துவம் என 27 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.அதில், அரசு பொது மருத்துவமனையின் முதன்மை குடிமையியல் மருத்துவர் பிரிவு காலியாக இருப்பதால், பொறுப்பு அதிகாரி மட்டுமே பணியில் உள்ளார். அதேபோன்று, நோயாளிகள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.ஆனால், 80 செவிலியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், 50 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். மருத்துவ உதவியாளர்களும் குறைவாக பணிபுரிவதால், விடுமுறை எடுக்காமல், காலை மாலை வேகைளில் கடும் மன உளைச்சலில் பணிபுரிகின்றனர்.நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் இடநெருக்கடி ஏற்படுகிறது. அதில் காய்ச்சல், மகப்பேறு, விபத்துகளில் சிக்கி வருவோருக்கு படுக்கை வசதிகளை தர இடமின்றி, தரையில் விரிப்புகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, மருத்துவமனையை ஒட்டிய தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தி, அவற்றில் கூடுதல் கட்டடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்குரிய இடத்தை மருத்துவமனையில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள், சுட்டிக்காட்டியும் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, அரசு காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது.ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்கு வரும் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக கட்டடங்களை கட்டித்தரவும், நோயாளிகள் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை