தொழிலதிபரிடம் 20.50 கோடி பேரம் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

தினகரன்  தினகரன்
தொழிலதிபரிடம் 20.50 கோடி பேரம் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

பெங்களூரு: தொழிலதிபரை காப்பாற்ற ₹20.50 கோடி பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர்  ஜனார்த்தன ரெட்டியின் பல்லாரி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்  அதிரடி சோதனை  நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரு கே.ஜி.ஹள்ளி  சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அபிடன்ட் என்ற தனியார் நிதி  நிறுவனத்தின் உரிமையாளர் பரீத். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து  பரீத்தை விடுவிக்க, கர்நாடக முன்னாள்  அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ₹20.50 கோடி  பேரம் பேசியதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.சி.பி கூடுதல் கமிஷனர்  அலோக் குமார், டி.சி.பி ஹரீஷ் தலைமையிலான போலீசார் விசாரணையை  துரிதப்படுத்தினர்.  அதன்படி நேற்று அதிகாலை பல்லாரி சிரகுப்பா மெயின் ரோட்டில் உள்ள ஜனார்த்தன  ரெட்டியின் வீட்டில் 8 பேர் கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸ் குழு அதிரடி சோதனை  நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த  சோதனை இரவு வரை நீடித்தது. இந்த  சோதனையின் போது ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் அவரது அத்தை, மாமா, உள்ளூர்  எம்.எல்.ஏவும், ரெட்டியின் நண்பருமான ராமுலு ஆகியோர் இருந்தனர்.  மேலும்  ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ காப்பு  ராமச்சந்திராவும், ரெட்டியின்  வீட்டிற்கு சென்றார். அங்கு இவர்கள் அனைவரும் சி.சி.பி. போலீசாரின்  சோதனையை பார்த்துக் கொண்டே இருந்தனர்.மதிய நேரம் திடீரென்று  ரெட்டியின் அத்தை சி.சி.பி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதையடுத்து அவரை கட்டுப்படுத்துவதற்காக சி.சி.பி போலீசார், உள்ளூர்  போலீசாரை வரவழைத்தனர். அவர்கள் வந்து  ரெட்டியின் அத்தை மற்றும் மாமாவை  சி.சி.பி சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொண்டனர்.இதற்கிடையே,  முக்கிய லாக்கர்களை குறி வைத்து நடந்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள்  சி.சி.பிக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. ₹20 கோடி மதிப்பு தங்கம் இருக்கும் இடத்தை  கண்டுபிடிக்கும் வரை வெவ்வேறு  வகையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை  மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை