டிஎஸ்பி தள்ளிவிட்டதில் வாலிபர் பலி வேடிக்கை பார்த்த 2 போலீசார் சஸ்பெண்ட்: சிசிடிவி கேமரா காட்டிக்கொடுத்தது

தினகரன்  தினகரன்
டிஎஸ்பி தள்ளிவிட்டதில் வாலிபர் பலி வேடிக்கை பார்த்த 2 போலீசார் சஸ்பெண்ட்: சிசிடிவி கேமரா காட்டிக்கொடுத்தது

திருவனந்தபுரம்: கேரளாவில் டிஎஸ்பி சாலையில் தள்ளியதில் வாலிபர் பலியான விவகாரத்தில், வாலிபரின் உயிருடன் விளையாடிய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கேரளாவின் நெய்யாற்றின்கரை டிஎஸ்பியாக இருப்பவர் ஹரிகுமார். கடந்த 2 நாட்களுக்கு முன் நெய்யாற்றின்கரை, கொடங்காவிளையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்  சனலை சாலையில் தள்ளிவிட்டார். இதில் கார் ேமாதி சனல் பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் டிஎஸ்பி ஹரிகுமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணியில் இருந்து அவர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இந்த சம்பவத்திற்கு பின்னர் ஹரிகுமார் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு போலீஸ் துறையை சேர்ந்த சில உயரதிகாரிகள் பாதுகாப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, சம்பவத்தன்று சனல் உயிருக்கு போராடியபடி சாலையில் கிடந்துள்ளார். போலீசார் அவரை காப்பாற்றாமல் அரை மணிநேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி  நெய்யாற்றின்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சனலின் நண்பர் ஒருவர் வேனில் ஏறி உள்ளார். அவரை போலீசார் கிழே இறக்கி விட்டனர்.ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லாமல் நெய்யாற்றின்கரை காவல் நிலையம் சென்றுள்ளனர். ஆம்புலன்சில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் டூட்டி முடிந்ததால் அங்கு சென்றுவிட்டு வேறு ஒரு போலீஸ்காரர் ஆம்புலன்சில்  ஏறியுள்ளார். அதன்பின் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்று உள்ளது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி சனல்  இறந்தார்.மக்கள் எல்லோரும் மருத்துவமனைக்குதான் சனலை போலீசார் கொண்டு செல்கின்றனர் என்று நினைத்த வேளையில், போலீசார் உயிருடன் விளையாடிய சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது . இதுகுறித்து  அறிந்ததும் திருவனந்தபுரம் எஸ்பி வேனில் இருந்த போலீஸ்காரர்கள் சஜீஸ்குமார், ஷிபு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே, சனல் பலியான விவகாரம் தொடர்பாக குற்றப்பிரிவு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம் குற்றப்பிரிவு எஸ்பி ஆன்டனி தலைமையில் விசாரணை நடைபெறும் என டிஜிபி லோக்நாத்  பெக்ரா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை