லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு சிபிஐ இயக்குனர் வர்மாவிடம் சிவிசி ஆணையர் விசாரணை

தினகரன்  தினகரன்
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு சிபிஐ இயக்குனர் வர்மாவிடம் சிவிசி ஆணையர் விசாரணை

புதுடெல்லி:  லஞ்ச வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவிடம் மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு (சிவிசி) ஆணையர் விசாரணை நடத்தினார்.  சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா. இவர்கள் இருவரும் லஞ்சம் வாங்கியதாக  ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர்.  அலோக் வர்மா ₹2 கோடி லஞ்சம் பெற்றதாக அஸ்தானாவும்,  ₹5 கோடி லஞ்சம் வாங்கியதாக அஸ்தானா மீது வர்மாவும் குற்றம்சாட்டினர். கடந்த அக்டோபர் 15ம் தேதி ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ லஞ்ச வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  அலோக் வர்மா, அஸ்தானாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ.யின் புதிய இயக்குனராக நாகேஸ்வர ராவ் பொறுப்பேற்றார்.தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 26ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அலோக் வர்மா மீதான லஞ்ச குற்றச்சாட்டு  குறித்து 2 வாரங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சிவிசி.க்கு உத்தரவிட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பட்நாயக் கண்காணிப்பில் விசாரணையை நடத்தவும் அறிவுறுத்தியது.இந்நிலையில், டெல்லியில் உள்ள சிவிசி அலுவலகத்தில் அலோக் வர்மா நேற்று நேரில் ஆஜரானார். பிற்பகல் ஒரு மணிக்கு வந்த அவரிடம் சிவிசி ஆணையர் சவுத்ரியும், ஆணையர் சரத்குமாரும் விசாரணை நடத்தினர்.  இதேபோல்,  ராகேஷ் அஸ்தானாவிடமும் சவுத்ரி விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை