பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

தினகரன்  தினகரன்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற முதல் 4 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 3.8 கோடியாக  இருந்த வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை  தற்போது 6.86 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அரசின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி முடியும் தருவாயில், இந்த எண்ணிக்கை 2 மடங்காக உயரக்கூடும்.கடந்த 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை,  இந்திய பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தி உள்ளதுடன், கூடுதல் வருமானம்,  ஏழைகளுக்கு வருமான வாய்ப்பு, சிறந்த கட்டமைப்பு, சிறந்த தரமான வாழ்க்கையையும் மக்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், வரி விதிப்புக்கான  அடித்தளத்தையும் அதிகரித்துள்ளது. இது தவிர, அரசுக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி.க்கு முந்தைய 2014-15ம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்த ஜிடிபி விகிதம், தற்போது 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், முன்பு பணமாக செலுத்தப்பட்ட வரி,  டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறியுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகம். இந்தாண்டு  மட்டும் கடந்த 31ம் தேதி வரையிலான காலத்தில் 5.99 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 54.33 சதவீதம் அதிகம். இது தவிர புதிதாக  86.35 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்வோர் பட்டியலில் இணைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை