போயிங் 737 மேக்ஸ் விமான சென்சாரில் கோளாறு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: விமான நிறுவனங்களுக்கு உத்தரவு

தினகரன்  தினகரன்
போயிங் 737 மேக்ஸ் விமான சென்சாரில் கோளாறு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: விமான நிறுவனங்களுக்கு உத்தரவு

புதுடெல்லி: போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் சென்சார் கருவிகளில் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே நடவடிக்கை எடுக்கும்படி விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பாலித் தீவுக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், கடந்த மாதம் இறுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. இதில்  அனைவரும் பலியாயினர். விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்ததில் விமானத்தின் வேகம் மற்றும் உயரத்தை காட்டும் சென்சார் கருவிகள் தவறான தகவல்களை அளித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போயிங் நிறுவனம் ஆகியவை நேற்று முன்தினம் அவசர கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளன. அதன்படி, விமானத்தின் கையேட்டில் சில மாற்றங்களை  செய்ய வேண்டும் எனவும், அதை போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்கும் பைலட்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் உயரத்தை காட்டும் ஏஓஏ ெசன்சார் கருவியின் தகவல்கள் தவறாக இருந்தால், விமானிகள் எப்படி செயல்பட வேண்டும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்கள் விமானத்தின் கையேட்டில் இடம் பெற  வேண்டும் என போயிங் 737  மேக்ஸ் ரக விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களில் மட்டும் எட்டு போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்குகின்றன.  எனவே, இந்நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் சென்சார் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை என்றால்,  விமானம் பறக்கும் உயரம் வெகுவாக குறையும், விமானத்தை கட்டுப்படுத்துவதில் விமானிகளுக்கு பிரச்னை ஏற்படலாம்’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை