புதுசுக்கு மவுசு இல்லாவிட்டாலும் பழைய கார்களுக்கு படு கிராக்கி : விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
புதுசுக்கு மவுசு இல்லாவிட்டாலும் பழைய கார்களுக்கு படு கிராக்கி : விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: பண்டிகை சீசனில் புதிய கார்கள் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனால், பழைய கார்கள் விற்பனை அமோகமாக இருந்துள்ளது. கடந்த ஆண்டை விட விற்பனை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக  விற்பனையாளர்கள் தெரிவித்தனர். பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு கார்கள் விற்பனையில் தொடர்ந்து மந்த நிலை காணப்பட்டது. வாகன இன்ஜின் தர நிலை உயர்வு, புதிய பாதுகாப்பு விதிகள் போன்றவற்றால் வாகனங்களின் விலை உயர்த்த வேண்டிய நிலை  உருவாகியுள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்படும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும், வாடிக்கையாளர்களை ஈர்க்க குறைந்த மற்றும் நடுத்தர பிரிவு கார்கள் புதிது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. ஆனாலும், விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. தீபாவளி பண்டிகையின்போது வழக்கமான  விற்பனை உயர்வு ஏற்படும். இந்த ஆண்டு இதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதோடு, ஆண்டு இறுதி என்பதால், இந்த ஆண்டு மாடல்களை விற்று தீர்ப்பதில் நிறுவனங்களும், டீலர்களும் தீவிரம் காட்டி வந்தன.  ஆனால் பழைய கார் விற்பனை அமோகமாக இருந்துள்ளது.  இதுகுறித்து பழைய கார் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் சிலர் கூறியதாவது: கார் நிறுவனங்கள் புதுப்புது மாடல்களை களம் இறக்கி வருகின்றன. இதுதான் சந்தை மந்தமான நிலையிலும் புதிய கார் விற்பனை ஓரளவு உயர காரணமாக இருந்தது. சுமார் 27 புதிய மாடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட  மாடல்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.  புதிய மாடல்களை வாங்குபவர்கள் பலர் பழைய கார்களை விற்று விட்டனர். இதனால் பழைய கார் சந்தைக்கும் கார் வரத்து அதிகரித்துள்ளது.  நடுத்தர மக்கள் சிலர், முதன் முதலாக கார் வாங்குவோர் சிலர் பழைய கார் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களின் தேவைக்கேற்ப கார்களும் வந்ததால் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட 40  முதல் 50 சதவீதம் பழைய கார் விற்பனை உயர்ந்தள்ளது. 15,000 கி.மீ. முதல் 20,000 கி.மீ ஓடிய 2 ஆண்டு ஆன கார்கள் கூட பழைய கார் சந்தைக்கு விற்பனைக் கவந்தன. இவற்றுக்கு ஏக கிராக்கி இருந்தது என்றனர்.

மூலக்கதை