சர்காருக்கு வலுக்கும் அதிமுக., எதிர்ப்பு : மதுரையில் காட்சி ரத்து, கோவையில் பேனர்கள் கிழிப்பு

தினமலர்  தினமலர்
சர்காருக்கு வலுக்கும் அதிமுக., எதிர்ப்பு : மதுரையில் காட்சி ரத்து, கோவையில் பேனர்கள் கிழிப்பு

அதிமுக.,வினரின் எதிர்ப்பால் மதுரையில் தியேட்டர் ஒன்றில் சர்கார் படம் காட்சி ரத்து செய்யப்பட்டது. முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி உள்ள படம் சர்கார். இப்படத்தில் ஆட்சபேனைக்குரிய காட்சிகள் இருப்பதாக அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் உள்ளிட்ட படக்குழு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இன்று(நவ., 8) காலை, மதுரை, கே.கே.நகரில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் முன்பாக அதிமுக., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். உடனடியாக இப்படத்தை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் இந்தபோராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும், சர்கார் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டனர்.

அதிமுக.,வினரின் எதிர்ப்பால் அந்த தியேட்டரில் நண்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக 4.30 மணிக்கு மேல் படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையிலும் போராட்டம் - பேனர்கள் கிழிப்பு

மதுரையை தொடர்ந்து கோவையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்டிருக்கும் சர்கார் படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிமுக., தொண்டர்கள் சிலர் அங்கு திரண்டு, சர்கார் படத்திற்கு எதிராக கோஷமிட்டதுடன், படத்தை தடை செய்ய வேண்டும் என கூறி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பட பேனர்களை கிழித்து எறிந்தனர்.


சென்னையிலும் போராட்டம்

மதுரை, கோவையை தொடர்ந்து சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சென்னையில் காசி தியேட்டர் முன்பு ஏராளமான அதிமுக., தொண்டர்கள் கூடி சர்கார் படத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த சர்கார் பட போஸ்டர், பேனர்களை அடித்தும், கிழித்தும் துவம்சம் செய்தனர். சில பேனர்களை சம்பந்தப்பட்டவர்களே நீக்கினர்.

மூலக்கதை