கேஒய்சி நடைமுறையை மாற்றிய மொபைல் நிறுவனங்கள்

தினகரன்  தினகரன்
கேஒய்சி நடைமுறையை மாற்றிய மொபைல் நிறுவனங்கள்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு மொபைல் நிறுவனங்களும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை திரட்ட ஆதாருக்கு மாற்றான கேஒய்சி நடைமுறைகளை பின்பற்ற  தொடங்கியுள்ளன.ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மொபைல் சேவை நிறுவனங்கள் ஆதார் அடிப்படையில் கேஒய்சி நடைமுறைகளை பூர்த்தி செய்ய தடை விதித்தது. ஆதார் வந்ததில் இருந்து உங்கள்  வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் எனப்படும் கேஒய்சி விதிமுறைகள் ஆதார் அடிப்படையிலேயே பூர்த்தி செய்யப்பட்டன. இதனால் போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயரில் இணைப்பு வாங்குவது  தடுக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவால் இது முடியாமல் போனது. எனவே, ஆதாருக்கு மாற்றாக வேறொரு நடைமுறையை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நிறுவனங்கள்  மாற்று நடைமுறைக்கு மாறிவருகின்றன. வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் மாற்று கேஒய்சி நடைமுறையை அமல்படுத்தி விட்டதாக அறிவித்தன. இதை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் ஆதார் அல்லாத கேஒய்சி முறையை செயல்படுத்த  தொடங்கியுள்ளதாக தொலைத்தொடர்பு துறையிடம் தெரிவித்துள்ளது. புதிதாக இணைப்புக்கு விண்ணப்பிப்பவர்களிடம் புதிய நடைமுறையில்தான் கேஒய்சி விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிர்வாக  இயக்குநர் அனுபம் வஸ்தவா தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளன. புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்ட தொலைத்தொடர்பு ஆணையம், இதற்கு இந்த மாதம் 20ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. மொபைல் சிம்கார்டு வாங்குவோரிடம் ஆதாருக்கு மாற்றாக, புகைப்பட மற்றும்  முகவரி சான்றை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் ஒட்டுவதற்கு பதில், கேமராவில் உடனே படம் எடுத்து அப்லோடு செய்யும் வகையில் இதற்கான செயலிகள்  உருவாக்கப்பட்டுள்ளன. இது ஆதாரை போன்றே தாள்களற்ற நடைமுறையாகவும், உடனடியாக போட்டோ எடுத்து அப்லோடு செய்வதன் மூலம் வேறொருவரின் ஆவணங்களை பயன்படுத்தி இணைப்பு வாங்குவது  தடுக்கப்படுகிறது. புதிய நடைமுறை குறித்து நவம்பர் 5ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை தெரிவித்திருந்தது. இதன்படி மேற்கண்ட திட்டத்தை நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன. இது தொலைத்தொடர்பு அதிகாரிகளின்  பரிசீலனையில் உள்ளது.

மூலக்கதை