கொள்முதல் செலவை குறைக்க அட்டை பெட்டி இறக்குமதி செய்ய முடிவு

தினகரன்  தினகரன்
கொள்முதல் செலவை குறைக்க அட்டை பெட்டி இறக்குமதி செய்ய முடிவு

கோவை: அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து விலையை அதிகரித்து  வருவதால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து அட்டை பெட்டிகளை  இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர். அட்டை பெட்டி  உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்று முறை அட்டை பெட்டிகளின்  விலையை உயர்த்தியுள்ளனர். இதனால்,  பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் எண்ணை  நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ்  பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்களது பொருட்களின் விலையை அதிகரிக்க  வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கம்யூட்டர் வருகையால் பேப்பரின் தேவை  குறைந்துள்ளது. இதனால் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு   தேவையான  மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி அடிக்கடி  விலைகளை அதிகரித்து வருகின்றனர்.  நாட்டில் 11 இடங்களில் மட்டுமே அட்டை  பெட்டி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.  இவர்கள் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்பத்தி விலையை அதிகரிப்பதாக குற்றச்சாட்டு  எழுந்துள்ளது.    இந்நிலையில், அட்டை பெட்டிகளை பயன்படுத்தும் பின்னலாடை நிறுவனங்கள், ஆயில்  நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ்  பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள்  அட்டைபெட்டிகளை வெளிநாடுகளிலிருந்து  இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தி–்ன்  பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை  நிறுவனங்கள், ஆயில் உற்பத்தி நிறுவனங்கள், முட்டை உற்பத்தியாளர்களுக்கு அட்டை பெட்டிகள் அதிகளவு தேவைப்படுகிறது. அட்டை பெட்டிகளின் விலையை  அடிக்கடி உயர்த்துவதால்  கூடுதல் செலவாகிறது. இதை தவிர்க்க பின்னலாடை  நிறுவனங்கள்  இணைந்து வெளிநாடுகளிலிருந்து மொத்தமாக ஆர்டர் கொடுத்து  அட்டை பெட்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனால், பொருட்களின்  விலை ஏற்றத்தை  தவிர்க்க முடியும். பின்னலாடை நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு தொழில் நெருக்கடியில் சிக்கியுள்ள  நிலையில், உற்பத்தி செலவை குறைக்க பல்வேறு சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.  பின்னலாடை  நிறுவனங்களுக்கு தேவையான நுால், ஊசி, மின் விளக்குகள், இயந்தரங்கள்,  எலாஸ்டிக் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் இடங்களிலிருந்து  நேரடியாக கொள்முதல் செய்யவும் முடிவு  செய்துள்ளோம். இதற்காக திருப்பூர்  ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் கொள்முதல் கமிட்டி துவங்கப்பட்டுள்ளது.  இந்த கமிட்டி உலக நாடுகளில் பின்னலாடை துறைக்கு தேவையான பொருட்கள்  தயாரிக்கும் தரமான  நிறுவனங்களை கண்டறிந்து விலைபட்டியல்களை சேகரித்து  குறைவான விலைப்புள்ளி வழங்கும் நிறுவனங்களிலிருந்து பொருட்களை இறக்குமதி  செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மூலக்கதை