அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் அதிரடி நீக்கம் : அதிபர் டிரம்ப் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் அதிரடி நீக்கம் : அதிபர் டிரம்ப் நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்சை பதவி நீக்கம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது,  ரஷ்யாவுடன் டிரம்ப் கூட்டுச்சதி செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணையை மேற்பார்வை செய்வதில் இருந்து விலகுமாறு அட்டர்னி ஜெனரல் செசன்சுக்கு கடந்த சில மாதங்களாக டிரம்ப் நெருக்கடி கொடுத்து வந்தார். மேலும், துணை அட்டர்னி ஜெனரல் ரோட் ரோசென்ஸ்டனை சிறப்பு வழக்கறிஞராக நியமித்ததற்கும் டிரம்ப் எதிர்ப்பு ெதரிவித்து வந்தார். இந்நிலையில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜெப் ெசசன்சை பதவி நீக்கம் செய்து அதிபர் டிரம்ப் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மேத்யூ ஜி விட்டேகரை  பொறுப்பு அட்டர்னி ஜெனரலாக நியமிக்கிறேன். நிரந்தர அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக அலபாமா முன்னாள் செனட்டரும் பதவி விலகிய அட்டர்னி ஜெனரலுமான ஜெப் செசன்ஸ், அதிபர் டிரம்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், `தாங்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் என்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளேன். பொறுப்பேற்ற நாள் முதல் நீதித்துறைக்கும் நாட்டுக்கும் சட்டப்படி சிறப்பான சேவை ஆற்றியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.தீபாவளி வாழ்த்து:  இதற்கிடையே, அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடிய இந்தியர்களுக்கு அதிபர் டிரம்ப் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில், `அமெரிக்கா, இந்தியா இடையேயான உறவை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பை தீபாவளி தந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.டிவி நிருபருடன் வாக்குவாதம்:வெள்ளை மாளிகையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது சி.என்.என் தொலைக்காட்சி நிருபர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கு அமெரிக்க எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு அதிபர் பட்டும் படாமல் பதில் கூறிய நிலையில், தொடர்ந்து அவர் அடுத்தடுத்து கேள்வி கேட்டார். இதனால் கோபம் அடைந்த அதிபர் டிரம்ப், அகோஸ்டாவிடம், அமருங்கள் என கூறினார். அவர் மைக்கை அடுத்த நிருபரிடம் கொடுத்த பின்னரே டிரம்ப் மீண்டும் பதில் சொல்லும் இடத்துக்கு வந்தார். மேலும், ஜிம் அகோஸ்டாவை, வெள்ளை மாளிகை பெண் செய்தித் தொடர்பாளர் வற்புறுத்தி இருக்கையில் அமரச் செய்தார். இந்நிலையில், ஜிம் அகோஸ்டா இனி வெள்ளை மாளிகை நிருபர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள டிரம்ப் தடை விதித்துள்ளார். இதற்கு சி.என்.என் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் சுதந்திரத்தில் டிரம்ப் தொடர்ந்து தலையிடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளது.

மூலக்கதை