இஸ்ரேல் நிறுவனம் அறிவிப்பு : எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பு

தினகரன்  தினகரன்
இஸ்ரேல் நிறுவனம் அறிவிப்பு : எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பு

டெல்அவிவ்: உயிர்கொல்லியான எய்ட்சுக்கு இஸ்ரேலை சேர்ந்த ஜியோன் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளது. எச்ஐவி எனப்படும் வைரசே எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணமாகும். இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. மனித உடலுக்குள் எச்ஐவி வந்ததும் இனப்பெருக்கம் செய்து உடல் முழுவதையும் ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசியை பயன்படுத்துதல், ரத்த தானம், பேறு காலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கும் இது பரவுகிறது. எய்ட்சால் ஆண்டுக்கு உலகம் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்நிலையில், எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த பயோடெக் நிறுவனமான ஜியோன் மெடிக்கல் நிறுவனம் “கம்மோரா” என்ற பெயரில் இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தின் மூலம் தொடர்ந்து நான்கு வாரம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் எச்ஐவி மற்றும் எய்ட்சை 99% அழித்துவிடலாம் என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. முதன் முறையாக மனிதர்க்ளிடம் வெற்றிகரமாக இந்த மருந்து பரிசோதிக்கப் பட்டுள்ளது. எச்ஐவி வைரஸ் மூலம் பெறப்பட்ட பெப்டைட்ஸ் என்ற புரதங்கள் மூலமாக இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்தி அவை செயல்படாத வகையில் இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது. இது எச்ஐவி உயிரணுக்களை கொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட மனித செல்களில் புகுந்து அதன் டிஎன்ஏ.வை உடைக்கிறது. இதனால், அந்த செல் வளர முடியாமல் வாழ்நாளை இழக்கும். வெறும் 4 வாரத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை செல்களையும் உயிரிழக்க செய்யும். “கம்மோரா”, எச்ஐவி நோய் தொற்று பரவுவதை 99 சதவீதம் தடுப்பதாக ஜியோன் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

மூலக்கதை